என் மலர்
இந்தியா

குடும்ப 'வாட்ஸ்அப்' குழுவில் தகவல் பதிவிட்டு தற்கொலை செய்த தாய்-மகள்
- கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும், இருவரது குடும்பத்தினருக்கிடையே பிரச்சனை நடந்தபடியே இருந்திருக்கிறது.
- இறுதிச் சடங்கில் கிரேஷ்மா மற்றும் அவரது தாய் சஜிதா ஆகிய இருவரும் பங்கேற்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பூந்துறை ஆரியன்குழி பகுதியை சேர்ந்தவர் ராஜீவ். இவரது மனைவி சஜிதா(வயது54). இவர்களது மகள் கிரேஷ்மா(30).
கிரேஷ்மாவுக்கும், பழஞ்சிரா பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததில் இருந்தே கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டபடி இருந்துள்ளது.
இதனால் திருமணமான 29 நாட்களிலேயே கணவன்-மனைவி இருவரும் பிரிந்து விட்டனர். கிரேஷ்மா தனது பெற்றோரின் வீட்டுக்கு வந்துவிட்டார். அவரது கணவர் உன்னி கிருஷ்ணன் வெளிநாட்டில் வேலைபார்த்ததால், அவர் அங்கு சென்றுவிட்டார்.
கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும், இருவரது குடும்பத்தினருக்கிடையே பிரச்சனை நடந்தபடியே இருந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிரேஷ்மாவின் தந்தை ராஜீவ் இதயக்கோளாறு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.
அதன்பிறகு அவர் தனது தாயுடன் வசித்து வந்தார். மகளை, அவரது கணவருடன் எப்படியாவது சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று சஜிதா விரும்பினார். இந்தநிலையில் உன்னி கிருஷ்ணனின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார். அவரது இறுதிச் சடங்கில் கிரேஷ்மா மற்றும் அவரது தாய் சஜிதா ஆகிய இருவரும் பங்கேற்றனர்.
அங்கு வந்திருந்த உன்னிகிருஷ்ணனின் குடும்பத்தினரிடம் இருவரும் பேசியுள்ளனர். அப்போது கிரேஷ்மா மற்றும் அவரது தாயை, உன்னிகிருஷ்ணன் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அதனைக்கேட்டு கிரேஷ்மாவின் தாய் சஜிதா அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார்.
இதனால் துக்க வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் ஆசுவாசப்படுத்தியதால் சிறிது நேரத்திற்கு பிறகு சஜிதா விழித்தெழுந்தார். அதன்பிறகு தாய்-மகள் இருவரும் தங்களின் வீட்டுக்கு வந்துவிட்டனர். துக்க வீட்டில் உன்னி கிருஷ்ணன் கடுமையான வார்த்தைகளால் திட்டியது கிரேஷ்மா மற்றும் அவரது தாய்க்கு மனவேதனையை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
இதனால் அவர்கள் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து கிரேஷ்மா மற்றும் அவரது தாய் ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தங்களின் குடும்ப வாட்ஸ்-அப் குழுவில் தகவல் பதிவிட்டனர்.
மேலும் தங்களின் சாவுக்கு காரணம் உன்னி கிருஷ்ணன் தான் எனவும், அவர் கிரேஷ்மாவை துன்புறுத்தியதன் காரணமாகவே இந்த முடிவை எடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்களது குடும்பத்தினர், சஜிதாவின் வீட்டுக்கு வந்தனர்.
அப்போது அங்கு தாய்-மகள் இருவரும் வீட்டுக்குள் பிணமாக கிடந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் பூந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருவனந்தபுரம் மருத்துக்வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிரேஷ்மா மற்றும் அவரது தாய் சஜிதா ஆகிய இருவரும் சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளனர். கிரேஷ்மாவின் கணவர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே தாய்-மகள் இருவரும் தற்கொலை செய்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக வழக்கு பதிந்து தொடர்ந்து வசாரணை நடத்தி வருகின்றனர். தாய்-மகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக கிரேஷ்மாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்துகின்றனர்.






