என் மலர்
இந்தியா

44 வெளிநாட்டுப் பயணம் சென்ற மோடி மணிப்பூரில் ஒரு நொடி கூட செலவிடவில்லை.. தர்மம் தவறியதாக கார்கே தாக்கு
- நீங்கள் 44 வெளிநாட்டுப் பயணங்களையும் 250 உள்நாட்டுப் பயணங்களையும் மேற்கொண்டுள்ளீர்கள்.
- பாதிக்கப்பட்ட அனைத்து சமூக மக்களையும் டெல்லியில் வைத்து கூட நீங்கள் ஏன் பார்க்கவில்லை?
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக மெய்தேய் - குக்கி என இரண்டு சமூகங்களுக்கு இடையே உருவான மோதல் கடந்த மே 3, 2023 அன்று வன்முறையாக வெடித்தது. பெண் நிர்வாணமாக ஊர்வலம் நடத்தப்பட்ட அவலமும் நடந்தது. 258 பேர் வரை கொல்லப்பட்டனர். 50,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர். இன்னும் ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் உள்ளனர்.
கலவரம் தொடங்கி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் மணிப்பூரில் பாதிக்கப்பட்ட சமூகங்கள் பேரணி நடத்தின.
இன்னும் வன்முறை ஓயாத மணிப்பூரில் கடந்த பிப்ரவரி முதல் ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் மணிப்பூர் பிரச்சனை தொடர்பாகப் பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"நரேந்திர மோடி ஜி, மணிப்பூர் உங்கள் வருகைக்காகவும், அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்புவதற்காகவும் காத்திருக்கும் வேளையில், நாங்கள் உங்களிடம் மூன்று முக்கியமான கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம்.
மணிப்பூரில் உங்கள் கடைசி தேர்தல் பேரணி நடைபெற்ற ஜனவரி 2022 முதல் இன்று வரை, நீங்கள் 44 வெளிநாட்டுப் பயணங்களையும் 250 உள்நாட்டுப் பயணங்களையும் மேற்கொண்டுள்ளீர்கள். ஆனாலும் நீங்கள் மணிப்பூரில் ஒரு நொடி கூட செலவிடவில்லை. மணிப்பூர் மக்கள் மீது ஏன் இந்த அலட்சியமும் புறக்கணிப்பும்? அரசியல் பொறுப்பு எங்கே?
இரட்டை எஞ்சின் அரசாங்கம் தனது குடிமக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கான அரசியலமைப்பு கடமையை ஏன் நிறைவேற்றத் தவறிவிட்டது? முதலமைச்சரை ஏன் முன்பே நீக்கவில்லை? இரட்டை எஞ்சின் அரசாங்கம் மணிப்பூரை இன்னும் தோல்வியடையச் செய்து வருகிறது. உள்துறை அமைச்சகம் தற்போது அங்கு அதிகாரத்தில் இருந்தாலும், வன்முறை சம்பவங்கள் நிற்கவில்லை.
உள்துறை அமைச்சர் அறிவித்த அமைதிக் குழுவுக்கு என்ன ஆனது? பாதிக்கப்பட்ட அனைத்து சமூக மக்களையும் டெல்லியில் வைத்து கூட நீங்கள் ஏன் பார்க்கவில்லை? அம்மாநிலத்திற்கு ஏன் ஒரு சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்கக்கூடாது? மோடி ஜி, மீண்டும் ஒருமுறை நீங்கள் உங்கள் கடமையை (ராஜதர்மத்தை) நிலைநிறுத்தத் தவறிவிட்டீர்கள்"கார்கே கூறினார்.