என் மலர்tooltip icon

    இந்தியா

    2025-ம் ஆண்டு இந்தியாவுக்கு சாதனைகள் நிறைந்தது: பிரதமர் மோடி பெருமிதம்
    X

    2025-ம் ஆண்டு இந்தியாவுக்கு சாதனைகள் நிறைந்தது: பிரதமர் மோடி பெருமிதம்

    • வந்தே மாதரம் 150 ஆண்டுகள் நிறைவு செய்த போதும் இதே உணர்வு காணப்பட்டது.
    • அறிவியல் மற்றும் விண்வெளித்துறையிலும் இந்தியா மாபெரும் முன்னேற்றங்களை அடைந்தது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்' (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். இன்று தனது 129-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-

    2025-ம் ஆண்டு இந்தியாவுக்கு சாதனை நிறைந்ததாக இருந்தது. பெருமைமிக்க மைல்கல்லாக அமைந்தது.

    ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் வலிமையை உலகுக்கு காட்டியது. ஆபரேஷன் சிந்தூர் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையின் சின்னமாக மாறியது. இன்றைய பாரதம் தனது பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளாது என்பதை உலகிற்கு தெளிவாக எடுத்துக் காட்டியது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் மீதான அன்பையும், பக்தியையும் வெளிப்படுத்தும் படங்கள் உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் வெளி வந்தன. வந்தே மாதரம் 150 ஆண்டுகள் நிறைவு செய்த போதும் இதே உணர்வு காணப்பட்டது.

    விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரை 2025 ஒரு மறக்க முடியாத ஆண்டாகவும் அமைந்தது. ஆண்கள் கிரிக்கெட் அணி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக்கோப்பை யை வென்றது.

    பாரதத்தின் புதல்விகள் மகளிர் பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பையை வென்று சரித்திரம் படைத்தனர்.

    உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்று, மாற்றுத்திறனாளி வீரர்கள், உறுதியான மனவுறுதியை வெளிப்படுத்தினர்.

    அறிவியல் மற்றும் விண்வெளித்துறையிலும் இந்தியா மாபெரும் முன்னேற்றங்களை அடைந்தது. சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த முதல் இந்தியர் ஆனார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வன விலங்கு பாதுகாப்பு தொடர்பான பல முன்னெடுப்புகளும் 2025-ம் ஆண்டில் முக்கியத்துவம் பெற்றன.

    நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் பாரதத்தின் தனித்துவமான பாரம்பரியம் ஆகிய அனைத்தும் ஒருங்கே காணப்பட்டன. ஆண்டின் தொடக்கத்தில் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா ஏற்பாடு செய்யப்பட்டது. இது உலகையே வியப்பில் ஆழ்த்தியது.

    இறுதியில், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் நடைபெற்ற கொடியேற்றும் விழா ஒவ்வொரு இந்தியரையும் பெருமையால் நிரப்பியது.

    ஒரு இந்தியரின் கடின உழைப்பால் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே மக்கள் வாங்குகிறார்கள். இந்தியாவிற்கு இன்னும் அதிக தன்னம்பிக்கையை அளித்துள்ளது என்று நாம் பெருமையுடன் கூறலாம்.

    உலகம் இந்தியாவை புதிய எதிர்ப்பார்ப்புடன் பார்க்கிறது. நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு உள்ளது. நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க மேலும் பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    அடுத்த மாதம் 12-ந்தேதி, சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய இளைஞர் தினம்' கொண்டாடப்பட உள்ளது. அன்று 'இளம் தலைவர்கள் உரையாடல்' நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. நானும் அதில் நிச்சயமாகப் பங்கேற்பேன் இந்த நிகழ்வை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    Next Story
    ×