என் மலர்
இந்தியா

பெண் டாக்டர் கொலை வழக்கு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்- மேற்கு வங்காள அரசு மேல்முறையீடு
- குற்றவாளி சஞ்சய்ராய்க்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
- மரண தண்டனைக்கு தகுதியான ஒரு கொடூரமான குற்றம் என்று நான் உறுதியாக உணர்கிறேன்.
கொல்கத்தா:
கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா்.
பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக போலீசுக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சியால்டா கோர்ட்டில் கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி அனிா்பன் தாஸ் முன்பாக, இந்த வழக்கு விசாரணை நடந்தது.
இந்த வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று நீதிபதி அனிா்பன் தாஸ் தீர்ப்பளித்தார்.
தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. குற்றவாளி சஞ்சய்ராய்க்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த தீர்ப்பு குறித்து கூறும்போது, இந்த தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு கொல்கத்தா ஐகோர்ட்டை நாடும். இது மரண தண்டனைக்கு தகுதியான ஒரு கொடூரமான குற்றம் என்று நான் உறுதியாக உணர்கிறேன் என்றார்.
இந்த நிலையில் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட சாகும் வரை சிறை தண்டனையை எதிர்த்து மேற்கு வங்காள அரசு கொல்கத்தா ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளது. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று மேல் முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளது.






