என் மலர்
இந்தியா

நீதிக்காக ஒன்றுபடுவோம்!.. பீகாரில் இன்று அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாடு - ராகுல் காந்தி அழைப்பு
- பாதயாத்திரை குறித்து தனது எக்ஸ் தளத்தில் காணொளி பகிர்ந்து ராகுல் காந்தி பேசினார்.
- கேள்விகளைக் கேளுங்கள், உங்கள் குரலை உயர்த்துங்கள்
பீகாரில் இந்த வருட இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கு தற்போது பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்ற ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரின் ஆட்சி நடந்து வருகிறது. எதிர்கட்சியாக இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளது.
இந்நிலையில் இன்று பீகாரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் பாதயாத்திரையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.
பெகுசராய் நகரில் 'இடம்பெயர்வை நிறுத்துங்கள், வேலை கொடுங்கள்' என்ற கருப்பொருளில் இந்த பாதயாத்திரை நடத்தப்படுகிறது.
டெல்லியில் இருந்து வருகை தந்து பாதயாத்திரையில் கலந்துகொண்டபின், பாட்னாவில் நடைபெறும் அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
பாதயாத்திரை குறித்து தனது எக்ஸ் தளத்தில் காணொளி பகிர்ந்து பேசிய ராகுல் காந்தி, பீகாரின் இளம் நண்பர்களே, ஏப்ரல் 7 ஆம் தேதி நான் பெகுசராய்க்கு வருகிறேன். ஓடுவதை நிறுத்துங்கள், பயணத்தில் தோளோடு தோள் சேர்ந்து நடந்து செல்லுங்கள்.
பீகார் இளைஞர்களின் உணர்வு, அவர்களின் போராட்டம், அவர்களின் துன்பம் ஆகியவற்றை உலகம் முழுவதும் காண வேண்டும் என்பதே இதன் குறிக்கோள்.
நீங்களும் வெள்ளை நிற டி-சர்ட் அணிந்து வாருங்கள். கேள்வி கேளுங்கள். உங்கள் உரிமைகளுக்காக பீகார் அரசிடம் குரல் எழுப்புங்கள். சட்டமன்றத் தேர்தலில் அந்த அரசை பதவியில் இருந்து அகற்ற வேண்டும்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் அரசியலமைப்பு மாநாடு குறித்து பதிவிட்டுள்ள அவர், சம்ப்ராண் சத்தியாக்கிரக இயக்கமாக இருந்தாலும் சரி, சமூக நீதிப் புரட்சியாக இருந்தாலும் சரி, பீகார் நிலம் எப்போதும் அநீதிக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இன்று அந்த வரலாறு மீண்டும் ஒலிக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக, பாரபட்சம் மற்றும் பாகுபாட்டிற்கு எதிராக, பொருளாதார, சமூக சமத்துவம் மற்றும்நீதிக்காக நாம் ஒன்றுபட்டு குரல் எழுப்புவோம்!. இன்று பாட்னாவில் சம்விதன் சம்மான் சம்மேளனத்திற்கு என்னுடன் சேருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.






