என் மலர்tooltip icon

    இந்தியா

    சபரிமலையில் நாளை முதல் பக்தர்களுக்கு பாயசத்துடன் மதிய உணவு
    X

    சபரிமலையில் நாளை முதல் பக்தர்களுக்கு பாயசத்துடன் மதிய உணவு

    • வரும் நாட்களில் ஆன்லைன் முன்பதிவு செய்து சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப உடனடி தரிசனத்திற்கான அனுமதி வழங்கப்படும்.
    • சபரிமலையில் 2-ம் கட்டமாக 1,500 போலீசார் பணி பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில டி.ஜி.பி. ரவடா சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்து வருகிறார். அவர் நேற்று காலையில் சாமி தரிசனத்திற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

    சபரிமலையில் கடந்த சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய 3 நாட்கள் தினசரி 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர். 18-ம் படி வழியாக நிமிடத்திற்கு சராசரியாக 85 பக்தர்கள் வீதம் ஏற்றி விடப்படுகிறார்கள்.

    தற்போது உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதால் கூட்ட நெரிசல் குறைந்துள்ளது. பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் ஆன்லைன் முன்பதிவு செய்து சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப உடனடி தரிசனத்திற்கான அனுமதி வழங்கப்படும்.

    சீசனையொட்டி 18 ஆயிரம் போலீசார் சபரிமலை, பம்பை, நிலக்கல், எருமேலி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு குழுக்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இன்று (அதாவது நேற்று) சபரிமலையில் 2-ம் கட்டமாக 1,500 போலீசார் பணி பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    தேவையான நேரங்களில் தமிழ்நாடு உட்பட அண்டை மாநில போலீசாரும் சபரிமலை பாதுகாப்பு பணிக்கு அழைக்கப்படுவார்கள் என்றார்.

    இந்தநிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் தேவஸ்தானம் தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு ஜெயகுமார் நிருபர்களிடம் கூறும்போது, 'சபரிமலையில் தற்போது பக்தர்களுக்கு கஞ்சி மற்றும் சாதாரண சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல் பொதுமக்களின் பங்களிப்புடன் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி சன்னிதானத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் பக்தர்களுக்கு பாயசம், அப்பளத்துடன் மதிய உணவு (சத்யா) வழங்கப்படும்' என்றார்.

    Next Story
    ×