என் மலர்
இந்தியா

ஏமனில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்திவைப்பு - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
- தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
- மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஏமனில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் கதி குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது.
இந்நிலையில் அவரது மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நீதிபதி விக்ரமநாத் மற்றும் நீதிபதி சந்தீப் மேத்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் மத்திய அரசின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி இந்த தகவலை தெரிவித்தார்.
"இந்த விஷயத்தில் மத்தியஸ்தம் செய்ய ஒரு புதிய மத்தியஸ்தர் முன்வந்துள்ளார். இந்த விஷயத்தில் எந்த பாதகமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது நல்ல செய்தி" என்று அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து விசாரணை ஜனவரி 2026 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏமன் நாட்டில் ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்த அவர், அதே நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
புதிதாக ஆஸ்பத்திரி தொடங்க திட்டமிட்டு செயல்பட்டு வந்தநிலையில், அவர்களுக்கிடையே நடந்த தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கை விசாரித்த ஏமன் நாட்டு நீதிமன்றம், நர்சு நிமிஷா பிரியா கொலை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு 2020-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.
அவரது மரண தண்டனையை ஏமன் உச்ச நீதித்துறை கவுன்சில் 2023-ம் ஆண்டு உறுதி செய்தது. நிமிஷா பிரியாவை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.






