என் மலர்
இந்தியா

கர்நாடகாவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும்: காங்கிரசின் இரண்டாவது தேர்தல் வாக்குறுதி
- பெண்களுக்கான மாநாட்டில் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார்.
- 1.5 கோடி குடும்பத் தலைவிகள் பயன்பெறுவார்கள் என்று கர்நாடக காங்கிரஸ் கமிட்டி கூறி உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதால், காங்கிரஸ், பாஜக தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். வாக்காளர்களை கவரும் வகையில் புதிய வாக்குறுதிகளை கொடுத்தவண்ணம் உள்ளனர்.
அவ்வகையில், காங்கிரஸ் சார்பில் நான் நாயகி என்ற தலைப்பில் பெண்களுக்கான மாநாடு நடத்தப்பட்டது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் முன்னேற்றத்துக்காக, ஒவ்வொரு வீட்டிலுள்ள குடும்பத்தலைவிக்கும் மாதம், 2,000 ரூபாய் என, ஆண்டுக்கு, 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்ததார்.
கிரக லட்சுமி என்ற இந்த திட்டத்தின்கீழ் 1.5 கோடி குடும்பத் தலைவிகள் பயன்பெறுவார்கள் என்று கர்நாடக காங்கிரஸ் கமிட்டி கூறி உள்ளது. ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் கிடைக்கும் இந்த நிதியுதவியானது, விலைவாசி உயர்வு மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றின் சுமையை சமாளிக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக பிரத்யேக தேர்தல் அறிக்கையை வெளியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குவோம் என காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது வாக்குறுதி இன்று வெளியாகி உள்ளது.