என் மலர்
இந்தியா

6வது முறையாக U19 உலகக்கோப்பை வென்ற இந்தியா - ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
- ஆறாவது 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை பட்டம், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தைப் பறைசாற்றும் ஒரு பெருமிதமான அடையாளம்.
- இந்திய அணியில் தமிழ்நாடு வீரர்கள் ஆர்.எஸ். அம்ப்ரீஷ் , தீபேஷ் தேவேந்திரன் இடம் பெற்றுள்ளனர்
U19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது. இதன்மூலம் ஆறாவது முறையாக U19 உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியுள்ளது.
இந்திய அணியின் இந்த வெற்றிக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
"அபாரமான உலகக் கோப்பை வெற்றியைப் பெற்றுள்ள நமது 19 வயதுக்குட்பட்டோர் ஆடவர் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!உங்களுடைய நிதானம், அச்சமின்மை மற்றும் உறுதிப்பாடு ஆகியவையே இன்றைய இந்தியாவின் ஜென்-இசட் (Gen Z) தலைமுறையை வரையறுக்கிறது. இந்த ஆறாவது 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை பட்டம், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தைப் பறைசாற்றும் ஒரு பெருமிதமான அடையாளம். சிறப்பாக விளையாடினீர்கள், சாம்பியன்களே!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,
"ஐசிசி ஆடவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று, நாட்டிற்கு மற்றொரு பெருமைமிக்க தருணத்தை வழங்கிய நமது இந்திய அணிக்கு வாழ்த்துகள். இது திறமை மற்றும் மனவுறுதியின் உண்மையான வெற்றி. இறுதிப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷியின் பிரமிக்க வைக்கும் ஆட்டமும், இந்தத் தொடர் முழுவதும் அவரது அசாதாரணமான செயல்பாடும் வரும் ஆண்டுகளில் பலராலும் நினைவு கூரப்படும். இந்த இளம் வீரர்கள் எதிர்காலத்தில் இந்திய தேசிய அணிக்காக விளையாடும்போது, இப்போது காட்டும் அதே திறமையுடன் நாட்டுக்காகப் பல வெற்றிகளைப் பெற்றுத் தர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த யு19 உலகக்கோப்பை இந்திய அணியில் தமிழ்நாடு வீரர்கள் ஆர்.எஸ். அம்ப்ரீஷ் , தீபேஷ் தேவேந்திரன் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.






