search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாரத் ஆகிறதா இந்தியா? சிறப்பு கூட்ட தொடரில் மசோதா தாக்கல் என தகவல்
    X

    'பாரத்' ஆகிறதா 'இந்தியா?' சிறப்பு கூட்ட தொடரில் மசோதா தாக்கல் என தகவல்

    • அழைப்பிதழில் "இந்திய ஜனாதிபதி" என்பது "பாரத்தின் ஜனாதிபதி" என இருக்கிறது
    • அடுத்த 1000 வருடங்கள் நாடு பயணிக்கும் திசையை "அம்ருத் கால்" முடிவு செய்யும்

    இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது.

    "அவசியமான சில மசோதாக்கள் தாக்கல் செய்வது உட்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். அவை குறித்து விரைவில் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்" என பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஆகஸ்ட் 31-ம் தேதி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இக்கூட்டத்தொடரில் நமது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதற்கு பதிலாக "பாரத்" என மாற்றுவது குறித்து மசோதா தாக்கல் செய்யப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

    தலைநகர் புது டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கு வரும் தலைவர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்தளிக்க உள்ளார். இதற்கான அழைப்பிதழில் அவரை குறிப்பிடும் இடத்தில், "இந்தியாவின் ஜனாதிபதி" என்பதற்கு பதிலாக "பாரத்தின் ஜனாதிபதி" என குறிப்பிடப்பட்டுள்ளதை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சுட்டி காட்டியுள்ளார். இவரது கருத்து இக்தகவலுக்கு வலு சேர்க்கும் விதமாக உள்ளது.

    "இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள், அதில் 'பாரத்' என்றும் 'இந்தியா' என்றும் 2 பேரையும் வைத்திருந்தது தவறு. 'பாரத்' என்பது நமது நாட்டின் தொன்மையான கலாசாரத்தை குறிப்பதாக உள்ளது. ஆனால் 'இந்தியா' என்பது நம்மை அவமானப்படுத்த பிரிட்டிஷ்காரர்களால் உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தை. அதை மீண்டும் 'பாரத்' என மாற்ற வேண்டும்" என பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்நாத் சிங் யாதவும் கூறியுள்ளார்.

    "மக்கள் புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ளவில்லை என்றாலும் நாம் 'இந்தியா' என நம் நாட்டை அழைக்க கூடாது. அதற்கு பதிலாக 'பாரத்' என அழைக்க தொடங்க வேண்டும்," என ராஷ்ட்ரீய சேவா சங்கம் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

    இதே விவகாரத்தை பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் நரேஷ் பன்ஸால், மாநிலங்களவையில் எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    "வெள்ளையர்களின் ஆதிக்க ஆட்சியின் விளைவாக ஏற்பட்ட அடிமை மனப்பான்மை, சுதந்திரம் பெற்றும் நமக்கு நீங்கவில்லை. அதனை நீக்கும் முயற்சியாக பல முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த 'அம்ருத் கால்' காலகட்டத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் அடுத்த 1000 ஆண்டுகளுக்கான பயணிக்கும் திசையை நாட்டுக்கு காட்டுவதாக இருக்கும்" என சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார். இதன் ஒரு பகுதியாகவே நாட்டின் பெயரை மாற்றும் திட்டம் கொண்டு வரப்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

    Next Story
    ×