என் மலர்
இந்தியா

எல்லையில் பதற்றம்: நாடு முழுவதும் 27 விமான நிலையங்கள் மூடல் - 400 விமானங்கள் ரத்து
- நேற்று 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
- முன்பதிவு செய்தவா்களுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஆபரேஷன் சிந்தூா்' நடவடிக்கைக்கு பிறகான வான்வெளி கட்டுப்பாடுகளால், ஸ்ரீநகா் உள்பட 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் நேற்று 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஸ்ரீநகா், ஜம்மு, லே, அமிர்தசரஸ், பதான்கோட், சண்டிகா், ஜோத்பூா், ஜெய்சால்மா், சிம்லா, தா்மசாலா, ஜாம்நகா், கிஷண்கா், ராஜ்கோட், பிகானீா், குவாலியா் உள்பட வட இந்தியா மற்றும் மேற்கு இந்திய பகுதிகளில் உள்ள 27 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இந்த விமான நிலையங்களில் இருந்து புறப்படும், வந்தடையும் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஏா்இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏா் போன்ற விமான நிறுவனங்கள், மேற்கண்ட நகரங்களுக்கான விமான சேவையை 10-ந் தேதி வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. ஏற்கெனவே முன்பதிவு செய்தவா்களுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று 2-வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டது. இன்று 400 விமான சேவை முடங்கியது.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 5.29 மணி வரை 27 விமான நிலையங்கள் மூடப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 850 விமான சேவைகள் முடங்கும் நிலை உள்ளது.






