search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜார்கண்ட்டை வென்றெடுத்த ஹேமந்த்.. சாத்தியமாக்கிய மனைவி கல்பனா முர்மு சோரன் - அப்படி என்ன செய்தார்?
    X

    ஜார்கண்ட்டை வென்றெடுத்த ஹேமந்த்.. சாத்தியமாக்கிய மனைவி கல்பனா முர்மு சோரன் - அப்படி என்ன செய்தார்?

    • ஒடிசாவின் மயூர்பஞ்ச்சில் கல்வியை முடித்து புவனேஸ்வரில் பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டங்களைப் பெற்றவர்.
    • பிரசாரத்தின்போது கல்பனாவின் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போன் மூலமாகப் பேரணியில் உரையாற்றினார்.

    ஜார்கண்ட் தேர்தல்

    81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தொடக்கத்திலிருந்தே இந்தியா கூட்டணியைச் சேர்ந்த லாலுவின் ஆர்ஜேடி, ஆளும் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா [ஜேஎம்எம்] மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

    இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஹேமந்த் சோரன் மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது. இந்தியா கூட்டணி 56 இடங்களிலும் பாஜக 24 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

    ஜேஎம்எம்

    பார்ஹைத் [Barhait] தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் சோரன் வெற்றி முகத்தில் உள்ளார். ஆனால் அவரது மனைவி கல்பனா சோரன் காண்டே தொகுதியில் போட்டியிட்ட நிலையில் 92482 வாக்குகளுடன் பாஜக வேட்பாளர் முன்யா தேவியை விட + 6862 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார். ஆனால் இந்த தேர்தலில் கல்பனா சோரனின் பங்களிப்பு ஜேஎம்எம் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதில் முக்கிய காரணி ஆகும்.

    அமலாக்கத்துறை பதிந்த நில முறைகேடு தொடர்பான இரண்டு வருட பழைய வழக்கில் கடந்த ஜனவரியில் மக்களவை தேர்தல் சமயத்தில் ஹேமந்த் சோரன் திடீரென கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜூன் மாதம் ஜாமினில் வெளிவந்தார். ஹேம்நாத் சோரன் சிறையிலிருந்த சமயத்தில் முதல்வராக இருந்த சம்பாய் சோரன் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் பாஜகவுக்குத் தாவினார். இது ஹேமந்த் சோரனுக்கு பெரும் பின்னடைவாகக் காணப்பட்டது.

    கல்பனா முர்மு சோரன்

    ஆனால் இந்த நேரத்தில் ஜேஎம்எம் கட்சியின் பிரதான முகமாக ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா முர்மு சோரன் [39 வயது] உருவெடுத்தார். கல்பனா, ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் கல்வியை முடித்து புவனேஸ்வரில் பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டங்களைப் பெற்றவர்.

    ஹேமந்த் சோரன் சிறையிலிருந்த இந்த இடைப்பட்ட 6 மாத காலத்தில் அதுவரை பெரிதாக அரசியலில் ஈடுபடாத கல்பனா சோரன் கட்சி தலைமை பொறுப்பை ஏற்று தேர்தல் வெற்றிக்கான வேலைகளைத் தொடங்கினார். மார்ச் 4 ஆம் தேதி கிரித் [Giridih] மாவட்டத்தில் ஜேஎம்எம் கட்சி தொடங்கியதன் 51வது ஆண்டு விழாவில் கல்பனா பொதுவெளியில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

    நம்பிக்கை நட்சத்திரம்

    இந்தியா கூட்டணி சார்பில் 28 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட நடந்த 'உல்குலன் நய்' பேரணி ஏப்ரல் 21 அன்று ராஞ்சியில் நடந்தது. இந்த பேரணியில் கல்பனாவின் பேச்சு அவருக்குத் தேசிய அளவில் கவனத்தைப் பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் ஜேஎம்எம் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக கல்பனா விளங்கினார்.

    பழங்குடியின அடையாளம்

    பாஜகவின் முக்கிய பிரசாரமாக வங்கதேச ஊடுருவல், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, லவ் ஜிகாத், லேண்ட் ஜிகாத் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது. பாஜக கட்டமைக்கும் இந்த வியூகத்துக்கு எதிராக ஆளும் ஹேம்ந்த் சோரன் கட்சி பழங்குடியின அடையாளம், மாநிலம் உரிமைகள், ஆகியவற்றை முன்னிறுத்தி தனது பிரசாரத்தை மேற்கொண்டது. முக்கியமாகப் பழங்குடியின பெண்களிடையே ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் தனது பிரசாரங்களின்மூலம் அதிக செல்வாக்கைப் பெற்றவராகத் திகழ்கிறார்.

    அரசியல் உரை

    ஜார்கண்டில் கட்சி செயல்படுத்திய சமூக நலத் திட்டங்களை பிரதானதப்படுத்தி கல்பனா சோரன் மேடைகள் தோறும் பேசினார். சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்தியதாலேயே தனது கணவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டையும் முன்னிறுத்தினார்.

    அரசியல் உரைகளாக அல்லாமல் பழங்குடியின பெண்களைச் சென்று சேரும் வகையில் எளிமையாக கல்பனா சோரன் பேசியது பெரும் வரவேற்பைப் பெற்றது. கணவர் ஹேமந்த் சோரனை போலல்லாது தனது ஒவ்வொரு பேச்சையும் கல்பனா நன்கு திட்டமிட்டுத் தயாரித்துப் பேசினார்.

    வெற்றி

    இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது கல்பனாவின் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போன் மூலமாகப் பேரணியில் கல்பனா மைக்கில் பேசிய நிகழ்வும் அரங்கேறியது. இந்நிலையில் தற்போது கல்பனா சோரனின் வெற்றி காண்டே தொகுதியோடு மட்டும் இல்லாமல் ஹேமந்த் சோரனின் ஒட்டுமொத்த மாநில வெற்றிக்கும் கல்பனா சோரன் முக்கிய காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. கல்பனா சோரனுக்கு மந்திரி பதவி வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

    Next Story
    ×