என் மலர்
இந்தியா

கொரோனா நோயாளியை கொன்றுவிடவும்: அரசு டாக்டர் பேசிய ஆடியோ வெளியான நிலையில் வழக்குப்பதிவு
- கொரோனா 2ஆவது அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டது.
- மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் பரிதாபமாக உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ஆவது அலை உச்சக்கட்டத்தில் இருந்தபோது, அரசு டாக்டர் நோயாளியை கொன்றுவிடுங்கள் எனக்கூறும் வகையில் வெளியான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று 2020ஆம் ஆண்டு இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தியது. முதற்கட்ட அலை தாக்குதலை தாக்குப்பிடித்த நிலையில், 2021-ல் மீண்டும் 2ஆவது அலை உருவானது. அப்போது மக்கள் மூச்சுவிட முடியாமல் திணறினர். இதனால் உயிர் பிழைப்பதற்கு ஆக்சிஜன் தேவைப்பட்டது. மருத்துவமனையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சிகிச்சைக்காக படுக்கை கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
கொரோனா பாதிப்பில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசு டாக்டர் ஒருவர் சக டாக்டரிடம், யாரையும் மருத்துவமனைக்குள் அனுமதிக்காதீர்கள். சிகிச்சை வந்துள்ள பெண்மணியை கொன்றுவிடுங்கள்" எனக் கூறுகிறார். ஆனால் சக டாக்டர், சமாளித்துக் கொண்டு, நோயாளிக்கு அளிக்கும் ஆக்சிஜன் அளவு குறைக்கப்பட்டுள்ளது" என பதில் அளிக்கிறார்.
இது தொடர்பான ஆடியோ வெளியாகி கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கிடையே சிகிச்சை பெற்ற பெண்ணின் கணவன், அரசு டாக்டர் மீது புகார் அளிக்க, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த பெண் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்துக் கொண்டார்.
போலீசார் ஆடியோ கிளப்பின் உண்மைத்தன்மையை கண்டறிந்து வருகின்றனர். அரசு டாக்டரின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சக டாக்டருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.






