search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரள நிதி மந்திரியை நீக்க கவர்னர் கடிதம்: நிராகரித்த பினராயி விஜயன்
    X

    கேரள நிதி மந்திரியை நீக்க கவர்னர் கடிதம்: நிராகரித்த பினராயி விஜயன்

    • கேரள அரசையும், பினராயி விஜயனையும் கவர்னர் ஆரிப் முகமது கான் கடுமையாக தாக்கி பேசினார்.
    • முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் சில மந்திரிகளும் கவர்னரை கடுமையாக விமர்சித்தனர்.

    திருவனந்தபுரம் :

    கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமதுகானுக்கும், கேரள அரசுக்கும் இடையே சமீப காலமாக கடும் பனிப்போர் நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி கேரள அரசையும், முதல்-மந்திரி பினராயி விஜயனையும் கவர்னர் ஆரிப் முகமது கான் கடுமையாக தாக்கி பேசினார்.

    அதற்கு பதிலடியாக முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் சில மந்திரிகளும் கவர்னரை கடுமையாக விமர்சித்தனர். அதைத்தொடர்ந்து தன்னை தரக்குறைவாக விமர்சிக்கும் அமைச்சர்களை பணிநீக்கம் செய்து விடுவேன் என்று கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கேரள பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நடந்த ஒரு விழாவில் கடந்த 18-ந்தேதி நிதி மந்திரி கே.என்.பாலகோபால் மற்றும் உயர்கல்வி மந்திரி ஆர்.பிந்து ஆகியோர் பேசிய போது தெரிவித்த கருத்துகள் கவர்னர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் கண்ணியத்தை குறைக்கும் வகையிலும் இருக்கிறது. எனவே, நிதி மந்திரியின் கருத்துகள் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை குலைக்கும் வகையில் உள்ளது.

    அவரின் இந்த கருத்து கேரளாவிற்கும், பிற மாநிலங்களுக்கும் இடையே பிளவை உருவாக்கும் வகையில் உள்ளது. மேலும் அவரின் அறிக்கையில் அவர் என்னிடம் எடுத்த சத்திய பிரமாணத்தை மீறுவதற்கு சற்றும் குறைவானது இல்லை. இந்த விவகாரத்தை முதல்-மந்திரி கவனமுடன் பரிசீலித்து அரசியல் அமைப்பு சட்டத்துக்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

    அதேநேரம் முதல்-மந்திரி பினராயி விஜயன் கவர்னரின் கோரிக்கையை நிராகரித்து விட்டதாக முதல்-மந்திரி அலுவலக அதிகாரப்பூர்வ வட்டாரம் மூலம் தெரியவந்துள்ளது.

    மேலும், பாலகோபால் மீதான நம்பிக்கை இன்னும் குறையாமல் அப்படியே இருப்பதாகவும் முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயன் உடனடியாக கவர்னருக்கு கடிதம் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

    Next Story
    ×