என் மலர்
இந்தியா

60 அடி உயர ராட்சத ராட்டினத்தில் தொங்கிய சிறுமி- வீடியோ
- ஒரு நிமிடம் வரை அச்சிறுமி 60 அடி அந்தரத்தில் தொங்கியுள்ளார்.
- ராட்சத ராட்டினத்தை இயக்க அனுமதி இல்லாத போது எப்படி இயக்கப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் 13 வயது சிறுமி 60 அடி உயர ராட்சத ராட்டினத்தில் தொங்குவது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்ப்போரின் இதயங்கள் சில நிமிடங்கள் நின்று விடுவது போல் உணர முடிகிறது.
இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. லக்னோவில் இருந்து கிட்டத்தட்ட 130 கிமீ தொலைவில் உள்ள லக்கிம்பூர் கெரியின் நிகாசன் பகுதியில் உள்ள ராகேத்தி கிராமத்தில் நடைபெற்ற கண்காட்சியில் 60 அடி உயர ராட்சத ராட்டினத்தில் அமர்ந்திருந்த 13 வயது சிறுமி சக்கரம் நகர தொடங்கியதும் அவள் சமநிலையை இழந்து ராட்டினத்தின் இரும்பு கம்பியில் தொங்கியபடி கூச்சலிட்டாள். இதையடுத்து அங்கிருந்தவர்கள் கூக்குரலிட ஆபரேட்டர்கள் ராட்டினத்தை நிறுத்தினர். ஒரு நிமிடம் வரை அச்சிறுமி 60 அடி அந்தரத்தில் தொங்கியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ வைரலான நிலையில், அடையாளம் காணப்படாத சிறுமி பாதுகாப்பாக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. மேலும் ராட்சத ராட்டினத்தை இயக்க அனுமதி இல்லாத போது எப்படி இயக்கப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






