என் மலர்tooltip icon

    இந்தியா

    கவர்னர் நேர்மையற்ற வகையில் செயல்பட்டுள்ளார்- உச்ச நீதிமன்ற தீர்ப்பு முழு விவரம் இணையதள பக்கத்தில் வெளியீடு
    X

    கவர்னர் நேர்மையற்ற வகையில் செயல்பட்டுள்ளார்- உச்ச நீதிமன்ற தீர்ப்பு முழு விவரம் இணையதள பக்கத்தில் வெளியீடு

    • மசோதாக்களை கிடப்பில் வைப்பது அல்லது நிராகரிக்கும் வீட்டோ அதிகாரம் கவர்னருக்கு இல்லை.
    • முந்தைய தீர்ப்புகளை மதிக்காமல் அவமரியாதை செய்துள்ளதாகவும் உச்சநீதிமன்றம் தனது 413 பக்க தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தமிழக அரசுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து முரண்பாடு இருந்து வருகிறது.

    தமிழகத்தில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் காலியாக இருந்த துணைவேந்தர் பதவிகளை நிரப்ப முடிவு செய்த தமிழக அரசு, துணை வேந்தர் தேடுதல் குழுவை அமைத்தது.

    இந்த குழுவில் பல்கலைக்கழக மானியக்குழுவை (யு.ஜி.சி) சேர்ந்த உறுப்பினர்களை தேடுதல் குழுவில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார்.

    இதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தமிழக அரசு சட்டசபையில் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியது. அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் பல மாதங்கள் கிடப்பில் வைத்து இருந்தார்.

    பின்னர் தன்னிடம் 12 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார். கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்திவைப்பதாக கவர்னர் கூறினார்.

    இந்த மசோதாக்களை தமிழக அரசு, 2023-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பி வைத்தது. அதை அவர் 2023-ம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினார்.

    இதையடுத்து நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்னருக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு ரிட் மனுவை தாக்கல் செய்தது.

    இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதனை தொடர்ந்து இம்மனு மீதான இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் கடந்த 8-ந்தேதி தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில், ஜனாதிபதிக்கு இருப்பதுபோல் மசோதாக்களை கிடப்பில் வைப்பது அல்லது நிராகரிக்கும் வீட்டோ அதிகாரம் கவர்னருக்கு இல்லை. அதேபோல் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்களில் கையெழுத்திடாமல் இருந்து அதனை பயனற்றதாக்கும் வீட்டோ அதிகாரமும் அவருக்கு இல்லை. கவர்னரின் நடவடிக்கைகள் நீதித்துறை மறு ஆய்விலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை.

    இந்த வழக்கில் அரசு அரசியலமைப்பின் 142-வது பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறோம். இதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

    கவர்னர் விழிப்புடன் இருக்க வேண்டும். மக்கள் நலன்களுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கவர்னர்கள் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது என தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில், கவர்னர் நேர்மையற்ற வகையில் செயல்பட்டுள்ளார். மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி நேர்மையற்ற வகையில் செயல்பட்டதாகவும், முந்தைய தீர்ப்புகளை மதிக்காமல் அவமரியாதை செய்துள்ளதாகவும் உச்சநீதிமன்றம் தனது 413 பக்க தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

    கவர்னருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் 413 பக்க முழு தீர்ப்பும் உச்ச நீதிமன்ற இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×