search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் விரக்தி- காங்கிரஸ் தலைவர்கள் 2 பேர் பதவி விலகல்
    X

    தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் விரக்தி- காங்கிரஸ் தலைவர்கள் 2 பேர் பதவி விலகல்

    • வேட்பாளர் பட்டியலை கண்ட மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 30-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் அனைத்து தொகுதிகளுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    பா.ஜ.க முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சி 45 பேர் கொண்ட 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. புதியதாக கட்சியில் சேர்ந்த 50 சதவீதம் பேருக்கு 2-வது வேட்பாளர் பட்டியலில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    வேட்பாளர் பட்டியலை கண்ட மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தெலுங்கானா காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் ஷேக் அப்துல்லா சோகைல், கொக்கட் பள்ளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்த வெங்கல் ராவ் ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார்.

    பதவி விலகல் கடிதத்தில் ஷேக் அப்துல்லா சோகைல் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சிக்காக கடந்த 43 ஆண்டுகளாக பாடுபட்டு வந்தேன்.

    எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காமல் என்னுடைய உழைப்புக்கு வெகுமதி அளித்துள்ளனர். முஸ்லிம் தலைமையை நசுக்கி விட்டு ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட ரேவந்த் ரெட்டிக்கு உயர் பதவியான மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டு உள்ளதால் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

    இதேபோல் வெங்கட் ராவ் தனது விலகல் கடிதத்தில் கட்சிக்காக 40 ஆண்டுகள் உழைத்து இருக்கிறேன் சில நாட்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்த புது முகங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளதால் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

    தெலுங்கானாவில் 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட மறுநாளே முக்கிய தலைவர்கள் 2 பேர் கட்சியில் இருந்து விலகிய சம்பவம் காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×