search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தொடர்ந்து அஜித் பவாரை சந்திப்பது, சரத் பவாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும்: உத்தவ் தாக்கரே சிவசேனா
    X

    தொடர்ந்து அஜித் பவாரை சந்திப்பது, சரத் பவாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும்: உத்தவ் தாக்கரே சிவசேனா

    • சரத் பவாருடன் அஜித் பவார் ரகசிய சந்திப்பு
    • அண்ணன் மகனை சந்திப்பதில் தவறு ஏதும் இல்லை என்றார் சரத் பவார்

    மகாராஷ்டிரா மாநில தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் ஒன்றிணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி செய்து வந்தன. சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியை கைப்பற்றி பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார்.

    சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பூசலை உண்டாக்கிய அஜித் பவார் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியில் பங்கேற்று துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.

    அதில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கிய சரத் பவாருக்கும், அஜித் பவாருக்கும் இடையில் அரசியல் மோதல் இருந்து வருகிறது. துரோகி என்ற அளவிற்கு அஜித் பவாரை சாடினார் சரத் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் கட்சி சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக இருதரப்பும் தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது.

    சரத் பவாரின் அண்ணன் மகன்தான் அஜித் பவார். கட்சி பிளவுக்குப் பிறகு ஏற்கனவே இருவரும் சந்தித்துள்ளனர். நேற்று முன்தினம் இருவரும் ரகசியமாக சந்தித்தது மகாராஷ்டிரா அரசியலில் பேசும்பொருளாக உருவெடுத்தது.

    சந்திப்பு குறித்து சராத் பவார், தனது அண்ணன் மகனான அஜித் பவாரை சந்திப்பதில் தவறு இல்லை. ஒருபோதும் பா.ஜனதாவில் இணையமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில், உத்தவ் தாக்கரேயின் கட்சி பத்திரிகையான சாம்னா, சரத் பவார் தொடர்ந்து அஜித் பவாரை சந்திப்பது அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

    மேலும், அதில் ''அஜித் பவார் தொடர்ந்து சரத் பவாரை சந்திப்பதை பார்க்க நகைப்புக்குரியதாக உள்ளது. அவர் அதை தவிர்க்கவில்லை.

    பா.ஜனதாவின் சாணக்கியர் குழப்பத்தை ஏற்படுத்த தொடர்ந்து அஜித் பவரை சரத் பவாருடன் சந்திக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். எனினும், இதுபோன்ற சந்திப்பு சரத் பவாரின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும். இது நல்லது அல்ல'' எனக் குறிப்பிட்டுள்ளது.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதில் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சிகள் இடம் பிடித்துள்ளன.

    Next Story
    ×