என் மலர்
இந்தியா

தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பெண்களுக்கு ரூ.5,000 வரவுவைப்பு!
- பல நலத்திட்டங்களை எனது அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
- தமிழ்நாட்டில் கடந்தமாதம் வரவு வைக்கப்பட்டது.
புதுச்சேரி அரசு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 63,000 குடும்பத் தலைவிகளுக்கு தலா ரூ.5,000 நிதியுதவி வழங்கியுள்ளது. புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.2,500 உதவித்தொகை, தற்போது அடுத்த இரண்டு மாதங்களுக்கு சேர்த்து மொத்தமாக ரூ.5,000-ஆக வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என்பதால், முன்கூட்டியே இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்ட அறிக்கையில்,
"குடும்ப முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் பெண்கள் ஆற்றும் பங்கு அளவிட முடியாதது. கல்வி சுகாதாரம், தொழில், நிர்வாகம் உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் தங்கள் திறமையால் சிறந்து விளங்கி சமுதாயத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவும், அவர்கள் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக வலுப்பெறவும் புதுச்சேரி அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குழந்தைப் பருவம் தொடங்கி முதுமை காலம் வரை பெண்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் புதுச்சேரி அரசு செய்து வருகிறது.
பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் முதலமைச்சரின் அரவணைப்புத் திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளின் பெயரில் தலா ரூ.50,000 வைப்புத்தொகை வழங்கும் திட்டம், அரசிடமிருந்து மாதாந்திர நிதியுதவி எதுவும் பெறாத வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம்: பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்கியால் முத்திரைத்தாள் கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை வழங்கும் திட்டம்: முதியோர், விதவைப் பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உயர்த்தப்பட்ட மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல நலத்திட்டங்களை எனது அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
குடும்பத்தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், அடுத்த இரண்டு மாதங்களுக்கான ரூ.5.000 உதவித்தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது. பெண்கள் நன்னம்பிக்கையுடன் முன்னேறி சமூக முன்னேற்றத்தில் மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எனது அரசின் நோக்கமாகும்.
இந்த மகளிர் தினத்தில், பெண்கள் அனைவரும் பூரண நலத்துடனும் நிறைந்த மகிழ்ச்சியுடனும் சமூகத்தில் சமத்துவமும் சமவாய்ப்பும் பெற்று அனைத்துத் துறைகளிலும் மேன்மேலும் முன்னேறி சாதனை படைக்க வேண்டும் என உளமார வாழ்த்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்தமாதமே மகளிர் உரிமைத்தொகையோடு, கோடை சிறப்புத் தொகை ரூ.2000 என சேர்த்து மொத்தம் ரூ.5000 வரவு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






