என் மலர்
இந்தியா

இல்லாத நாட்டுக்கு தூதரகம் நடத்திய போலி தூதர் கைது.. உ.பி.யில் அரங்கேறிய பலே மோசடி!
- ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பிற முக்கிய தலைவர்களுடன் இருக்கும் போலி புகைப்படங்களை அவர் வைத்திருந்தார்.
- இல்லாத இந்த நாட்டில் வேலை வழங்குவதாக இளைஞர்களை நம்ப வைத்துள்ளார்.
இல்லாத ஒரு நாட்டிற்கு தூதரகம் அமைத்து தன்னை தூதராக அறிவித்து மோசடியில் ஈடுபட்ட ஒருவரை உத்தரபிரதேச காவல்துறை கைது செய்துள்ளது.
ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்ற நபர், காஜியாபாத்தில் ஒரு ஆடம்பரமான இரண்டு மாடி கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து மேற்கு ஆர்க்டிக் என்ற பெயரில் ஒரு தூதரக அலுவலகத்தை நடத்தி வந்துள்ளார்.
மேற்கு ஆர்க்டிக் என்பது அண்டார்டிகாவில் உள்ள ஒரு பகுதி. அதற்கு எந்த சர்வதேச அங்கீகாரமும் இல்லை. அங்கு யாரும் வசிக்கவில்லை. ஹர்ஷ்வர்தன் ஜெயின் இந்த பிராந்தியத்தின் பெயரில் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டார். இல்லாத இந்த நாட்டில் வேலை வழங்குவதாக இளைஞர்களை நம்ப வைத்துள்ளார்.
எந்த சந்தேகமும் ஏற்படாமல் இருக்க, விலையுயர்ந்த கார்கள், தூதரக பாஸ்போர்ட்டுகள், வெளிநாட்டு நாணயம் மற்றும் நாட்டின் முக்கிய தலைவர்களுடன் போலி புகைப்படங்களில் தூதரக ஸ்டிக்கர்களை ஒட்டினார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பிற முக்கிய தலைவர்களுடன் இருக்கும் போலி புகைப்படங்களை அவர் வைத்திருந்தார். இது தவிர, பணமோசடி நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.
சமீபத்தில் அவர் தூதரக புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததை அடுத்து, அவரது செயல்பாடுகளில் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். 12 பாஸ்போர்ட்டுகள், வெளியுறவுத்துறை முத்திரைகள் பதித்த கோப்புகள், 34 நாடுகளின் முத்திரைகள், ரூ.44 லட்சம் ரொக்கம், மற்றும் விலையுயர்ந்த கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.






