என் மலர்
இந்தியா

வரதட்சணை கொடுமை: 3 வயது குழந்தையை தீ வைத்து கொன்று ஆசிரியை தற்கொலை
- சஞ்சு பிஷ்னோயிடம் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
- சஞ்சு கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் சஞ்சு பிஷ்னோய். இவருக்கு திலீப் என்பவருடன் திருமணமாக 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு யஷஸ்வி (வயது3) என்ற குழந்தை இருந்தது. சஞ்சு பிஷ்னோய் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
சஞ்சு பிஷ்னோயிடம் அவரது கணவர் திலீப், மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சஞ்சு கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானார்.
சம்பவத்தன்று காலை அவரது கணவர் சஞ்சுவை பைக்கில் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு மதியம் வீட்டுக்கு அழைத்து வந்தார்.
அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சஞ்சு வீட்டுக்கு வந்தவுடன் டைனிங் டேபிளில் இருந்த பெட்ரோலை தனது குழந்தை மீது ஊற்றி தீவைத்தார். மேலும் தன் மீதும் தீவைத்துக் கொண்டார். 2 பேரின் அலறல் சத்தத்தை கேட்டு கணவர், மாமியார் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
குழந்தை யஷஸ்வி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சஞ்சுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சஞ்சுவின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் கணவர் திலீப், மாமியார் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் செய்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






