என் மலர்
இந்தியா

4 பாகிஸ்தானியர்களுடன் நேரடி தொடர்பில் இருந்த ஜோதி மல்ஹோத்ரா - வெளியான அதிர்ச்சி தகவல்கள்
- பாகிஸ்தானுக்கு சென்ற அவர் அங்கு ஐ.எஸ்.ஐ.யுடன் நேரடி தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.
- அவரது செல்போன் மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானா மாநிலத்தை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்கோத்ரா கடந்த 17ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவர் கடந்த 2023-ம் ஆண்டு முதல் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி எஹ்சான் உர் ரஹீம் என்ற டேனிஸ் என்பவருடன் தொடர்பில் இருந்ததும், அவர் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறையினருக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. டேனிஸ் மூலமாக பாகிஸ்தானுக்கு சென்ற அவர் அங்கு ஐ.எஸ்.ஐ.யுடன் நேரடி தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. அவரது செல்போன் மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.
இதில் லேப்டாப்பில் இருந்து 12 டெரா பைட்ஸ்சுக்கும் அதிகமாக டிஜிட்டல் தரவுகள் இருந்தன. அவற்றை ஆய்வு செய்ததில் ஜோதி மல்கோத்ரா பாகிஸ்தான் உளவுத்துறையுடன் அரட்டையடித்ததும், அவர்களுடனான அழைப்பு பதிவுகள், வீடியோ காட்சிகள், நிதி பரிவர்த்தனைகள் அனைத்தும் சிக்கின.
ஜோதி மல்கோத்ரா ஐ.எஸ்.ஐ.யுடன் நேரடி தொடர்பில் இருந்ததாகவும், குறிப்பாக 4 பாகிஸ்தானியர்களுடன் நேரடி தொடர்பில் இருந்து தகவல்களை பரிமாறியதற்கான ஆதாரங்களும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து சிறப்பு பாதுகாப்பு அனுமதி மற்றும் சலுகைகளை பெற்றிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் வி.ஐ.பி. சலுகையை பயன்படுத்திய ஜோதி மல்கோத்ரா, பாகிஸ்தானில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாகூர் உள்பட பல்வேறு இடங்களில் சுற்றிய காட்சிகளும் டிஜிட்டல் ஆவணங்களில் இருந்தன. இந்த வீடியோக்கள் ஜோதியின் பாகிஸ்தான் பயணங்களில் அவர் வி.ஐ.பி. வரவேற்பு பெற்றதை அம்பலப்படுத்தி உள்ளது.
மேலும் ஜோதி மல்கோத்ரா வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்ற விபரங்கள் தொடர்பாக டிஜிட்டல் ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக ஹிசார் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே போலீஸ் காவல் முடிந்து யூடியூபர் ஜோதி மல்கோத்ரா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.






