என் மலர்
இந்தியா

"நீதிமன்றங்கள் தலையிட முடியாது, ஆனால்.." வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
- எந்தவொரு நடவடிக்கை அல்லது நியமனங்களையும் மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
- அரசு அதிகாரி நீதிபதியாகச் செயல்படுவார். யாரும் எதுவும் கேட்க முடியாது
இஸ்லாமியர்களின் சொத்துக்களை நிர்வகிக்கும் வக்பு வாரியத்தின் பல்வேறு திருத்தங்களைச் செய்து கடந்த ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது மத்திய அரசு. ஜனாதிபதி ஒப்புதலுடன் உடனே மசோதா சட்டமானது. ஆனால் இந்த சட்டத்திருத்தம் சிறுபான்மையினரான இஸ்லாமியர்களின் மத உரிமைகளைப் பறிப்பதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதற்கிடையே பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. சுமார் 70க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கு முதலில் விசாரணைக்கு வந்தபோது புதிய வக்பு சட்டத்தின் கீழ் எந்தவொரு நடவடிக்கை அல்லது நியமனங்களையும் மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான இன்றைய விசாரணை, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், "இந்த சட்டம் வக்பு நிலங்களைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டது. எந்தவொரு நடைமுறையையும் பின்பற்றாமல் வக்பு சொத்துக்கள் பறிக்கப்படும் வகையில் சட்டம் உள்ளது. குறைந்தது ஐந்து ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவர் மட்டுமே வக்புக்கு நிலத்தை வழங்க முடியும் என்ற நிபந்தனை இதில் இருக்கிறது. அதாவது நான் மரணப் படுக்கையில் இருக்கும்போது வக்புக்கு சொத்து வழங்க விரும்பினால், நான் ஒரு முஸ்லிம் என்பதை நிரூபிக்க வேண்டும். இது அரசியலமைப்பிற்கு விரோதமானது" என்றார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி கவாய், "பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் சட்டப்பூர்வமாகவே கருதப்படும். அவை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கருதுவதற்கு வலுவான காரணம் இல்லாவிட்டால் அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. இந்த சூழலில் வேறு எதுவும் எங்களால் சொல்ல முடியாது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கபில் சிபல், "புதிய வக்பு சட்டத்தின் கீழ், எந்தவொரு கிராம பஞ்சாயத்தும் அல்லது யாராக இருந்தாலும் வக்பு குறித்து குறைகளை எழுப்பலாம். இந்த விவகாரத்தில் அரசு அதிகாரி இறுதி முடிவை எடுக்கலாம். அதாவது அரசு அதிகாரி நீதிபதியாகச் செயல்படுவார். யாரும் எதுவும் கேட்க முடியாது" என்றார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.