search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மேலும் ஒரு அவதூறு வழக்கு.. ராகுல் காந்தி உள்ளிட்ட காங். தலைவர்களுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது
    X

    மேலும் ஒரு அவதூறு வழக்கு.. ராகுல் காந்தி உள்ளிட்ட காங். தலைவர்களுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது

    • பாஜக அரசு 40 சதவிகித ஊழலில் ஈடுபட்டதாக காங்கிரஸ் விளம்பரம் வெளியிட்டது.
    • பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக மாநில தலைவர் தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.

    பெங்களூரு:

    பாஜக தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோருக்கு பெங்களூரு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

    எம்.பி, எம்.எல்.ஏ.களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், விசாரணையை 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது. குற்றம்சாட்டப்பட்ட தலைவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கில் ஜூலை 27ஆம் தேதி வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது.

    வழக்கு பின்னணி: கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மே 5ம் தேதி நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. முந்தைய பாஜக அரசு 40 சதவிகித ஊழலில் ஈடுபட்டதாகவும், நான்கு ஆண்டுகளில் 1.5 லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடித்ததாகவும் அந்த விளம்பரங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு உண்மையல்ல எனக் கூறி பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.கேசவபிரசாத் மே 9ம் தேதி புகார் பதிவு செய்தார். காங்கிரஸ் கூறும் இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை, பாரபட்சம் மற்றும் அவதூறு பரப்புவதாகவும், பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என்றும் அவர் தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய ராகுல் காந்தி, எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்ப பெயர் இருப்பதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழக்க நேரிட்டது. தற்போது மேலும் ஒரு அவதூறு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

    Next Story
    ×