என் மலர்
இந்தியா

மனைவி சோனத்துடன் ராஜா ரகுவன்ஷி.
தேனிலவு சென்ற இடத்தில் புதுமாப்பிள்ளை கொலை - மனைவியை தேடும் போலீஸ்
- கடந்த மாதம் 24-ந் தேதி முதல் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை.
- கையில் குத்தப்பட்டுள்ள டாட்டூ உதவியால் இறந்தவர் ராஜா ரகுவன்ஷி என உறவினர்கள் உறுதி செய்தனர்.
இந்தூர்:
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ராஜா ரகுவன்ஷி(வயது 30). இவருக்கும் சோனம் ரகுவன்ஷி(27) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது, கடந்த மாதம் 23-ந் தேதி மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் உள்ள சோஹ்ரா பகுதியில் தேனிலவு கொண்டாட பயணம் மேற்கொண்டனர். முதலில் ஷில்லாங் சென்ற அவர்கள், அங்கிருந்து இரு சக்கர வாகனம் வாடகைக்கு எடுத்துக் கொண்டு சோஹ்ராவிற்கு சென்றனர். கிழக்கு காசி மலை மாவட்டத்தில், தொடர்மழை பெய்யும் சிரபுஞ்சிக்கு சென்றனர். அங்குள்ள நான்கிரியாட் கிராமத்தில் விடுதியில் தங்கி தேனிலவை கொண்டாடினர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை, அவர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் வாடகைக்கு எடுத்த இரு சக்கர வாகனம், ஓஸ்ரா மலைப் பகுதியில் உள்ள சோஹ்ரா ரிம் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டது.
அதனால் அவர்கள் ட்ரெக்கிங் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்பட்டது. தகவலறிந்த மேகாலயா போலீசாரும் உள்ளூர் மக்களும் இணைந்து தீவிர தேடுதல் பணியைத் தொடங்கினர். இந்தூர் காவல் ஆணையர் சந்தோஷ் சிங், குற்றப்பிரிவு துணை ஆணையர் ராஜேஷ் குமார் மேகாலயா விரைந்து விசாரணையை துரிதப்படுத்தினர்.
மத்தியப் பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ், மேகாலயா முதல்-மந்திரிகான்ராட் சங்மாவுடன் பேசி, புதுமணத் தம்பதியை கண்டுபிடிக்க உதவி கோரினார். ராஜாவின் சகோதரர் விபின் மற்றும் சோனமின் சகோதரர் கோவிந்த் ஆகியோர் இந்தூரிலிருந்து ஷில்லாங் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஓஸ்ரா மலைப் பகுதி குற்றச் செயல்களுக்கு பெயர் பெற்றது. புதுமணத் தம்பதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
இந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து, 20 கி.மீ., தொலைவில் சோஹ்ரா பகுதி அருவிக்கரையில், ராஜா ரகுவன்ஷி இறந்த நிலையில் உடல் பாதி சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. அவரது கையில் குத்தப்பட்டுள்ள டாட்டூ உதவியால் இறந்தவர் ராஜா ரகுவன்ஷி என உறவினர்கள் உறுதி செய்தனர்.
ராஜாவின் உடலில் இருந்து இரண்டு மோதிரங்கள், ஒரு தங்கச் சங்கிலி, வளையல், பர்ஸ், மொபைல் ஆகியவற்றை காணவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே ராஜா ரகுவன்ஷி இறந்த நேரம் மற்றும் பிற தகவல்கள் தெரியவரும். போலீசார் அரிவாள் போன்ற ஆயுதத்தையும் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் ராஜா ரகுவன்ஷி மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தொடர்ந்து அவரது மனைவி சோனத்தை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து பெண்ணின் வெள்ளை சட்டை, உடைந்த அலைபேசி மீட்கப்பட்டுள்ளதால், ராஜாவை கொன்ற கும்பல் சோனத்தை கடத்திச் சென்றார்களா என போலீசார் விசாரிக்கின்றனர். முன்னதாக தேனிலவின் போது, சோனம் தனது மாமியாருடன் தொலைபேசியில் பேசியது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.






