search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆம் ஆத்மி கட்சி மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த கவர்னருக்கு சுகேஷ் சந்திரசேகர் கோரிக்கை
    X

    ஆம் ஆத்மி கட்சி மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த கவர்னருக்கு சுகேஷ் சந்திரசேகர் கோரிக்கை

    • இந்த குற்றச்சாட்டு ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய தலைவலியை உருவாக்கி இருக்கிறது.
    • சுகேஷ் சந்திரசேகர் கூறிய இந்த விஷயங்களை டெல்லி பா.ஜனதா தீவிரமாக எடுத்துள்ளது.

    புதுடெல்லி :

    இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு உள்பட பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி டெல்லி மண்டோலி சிறையில் இருக்கும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், தற்போது ஆம் ஆத்மி கட்சி மீது கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்லி திகார் சிறையில் தான் இருந்தபோது தனது சொகுசு வாழ்க்கைக்கும், பாதுகாப்புக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு கோடிக்கணக்கில் பணம் செலுத்தியதாக டெல்லி கவர்னர் வினய்குமார் சக்சேனாவுக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார். டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் ரூ.10 கோடியும், சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் கோயல் ரூ.12.5 கோடி பெற்றதாகவும் குறிப்பிட்ட அவர், மாநிலங்களவை எம்.பி. பதவிக்காக ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.50 கோடி கொடுத்ததாகவும் கூறியிருந்தார்.

    மேலும் தென் மாநிலங்களில் கட்சிக்கு ஆட்கள் சேர்க்க ஆம் ஆத்மி கட்சி தன்னிடம் ரூ.500 கோடி கேட்டதாகவும் புகார் தெரிவித்து இருந்தார்.

    இந்த குற்றச்சாட்டுகளில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மந்திரிகள் சத்யேந்தர் ஜெயின், கைலாஷ் கெலாட் ஆகியோரது பெயர்கள் அடிபட்டன. ஆனால் "இந்த குற்றச்சாட்டுகள் கற்பனையானவை, குஜராத் தேர்தல் தோல்வி பயத்தில் பா.ஜனதா நடத்தும் வேலை இது' என கெஜ்ரிவால் மறுப்பு தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் தனது வக்கீல் மூலம் மீண்டும் ஒரு கடிதத்தை வெளியிட்டு இருக்கிறார்.

    அதில், 'சிறையில்தான் தொடர்ந்து மிரட்டப்படுவதாக தெரிவித்துள்ள அவர், இந்த விஷயத்தில் ஆம் ஆத்மி கட்சி மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்று டெல்லி கவர்னரை வலியுறுத்தியுள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய தலைவலியை உருவாக்கி இருக்கிறது.

    சுகேஷ் சந்திரசேகர் கூறிய இந்த விஷயங்களை டெல்லி பா.ஜனதா தீவிரமாக எடுத்துள்ளது. சுகேஷ் கூறியபடி சி.பி.ஐ. விசாரணைக்கு அழுத்தம் கொடுக்குமாறு டெல்லி கவர்னரை பா.ஜனதா வலியுறுத்த உள்ளது. இது தொடர்பாக விரைவில் கவர்னரை சந்திக்க இருப்பதாக டெல்லி பா.ஜனதா தலைவர் ஆதேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×