search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் பதவியில் காங்கிரசுக்கு ஆர்வம் இல்லை.. எதிர்க்கட்சிகளின் 2வது நாள் கூட்டத்தில் கார்கே பேச்சு
    X

    பிரதமர் பதவியில் காங்கிரசுக்கு ஆர்வம் இல்லை.. எதிர்க்கட்சிகளின் 2வது நாள் கூட்டத்தில் கார்கே பேச்சு

    • எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா நேற்றிரவு விருந்து கொடுத்தார்.
    • இந்த கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவது தொடர்பாக விரிவாக பேசப்பட்டது.

    பெங்களூரு:

    பா.ஜ.க.வை எப்படியாவது வருகிற பாராளுமன்ற தேர்தலில் வீழ்த்திவிட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களிலும் பெரும்பான்மையாக வெற்றி பெற்று பெரும் வலிமையாக இருக்கும் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற கருத்து பல்வேறு எதிர்க்கட்சிகளிடமும் ஏற்பட்டுள்ளது.

    அந்த வகையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முதல் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கருத்து வேறுபாடுகளை கடந்து பா.ஜ.க.வை தோற்டிக்க வேண்டும் என்பதே நம்முடைய ஒற்றை இலக்காக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் எதிர்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் 2 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த கூட்டத்துக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட பிரதான பெரிய கட்சிகள் தவிர முதல் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாத பல சிறிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    குறிப்பாக தி.மு.க. கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வார்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மணி) உள்ளிட்ட கட்சிகளுக்கு புதிதாக அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள், சிறிய கட்சிகள், பாஜ.க. பக்கம் தாவி விடக்கூடாது என்பதை மனதில் வைத்து எதிர்கட்சிகள் தங்களது கூட்டணியை விரிவுபடுத்தியது.

    இந்த நிலையில் பெங்களூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள தாஜ் வெஸ்டன்ட் நட்சத்திர ஓட்டலில் நேற்று எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் தொடங்கியது. இதில் பங்கேற்க காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்-அமைச்சர் நிதிஷ்குமார், மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மராட்டிய மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் லாலு பிரசாத் யாதவ், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகமூபா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், கேரளா மாநில காங்கிரஸ் (எம்) தலைவர் ஜோஸ் கே.மணி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அபிஷேக் பானர்ஜி, டெரிக் ஜி.பிரைன் உள்பட 26 கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா நேற்றிரவு விருந்து கொடுத்தார். இதில் சைவ, அசைவ உணவுகள் மற்றும் கர்நாடக மாநில பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் எதிரும், புதிருமாக உள்ள கட்சி தலைவர்கள் தங்களது எதிர்ப்புகளை ஒதுக்கிவிட்டு இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இன்று 2-வது நாளாக எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவது தொடர்பாக விரிவாக பேசப்பட்டது. மேலும் தேசிய அளவில் பொது வேட்பாளரை நிறுத்துவது, அந்தந்த மாநிலங்களில் பெரும்பான்மையாக உள்ள மாநில கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க. வேட்பாளருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது? என்பது குறித்தும் பேசப்பட்டது.

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, பிரதமர் பதவியை பெறுவதிலோ அதிகாரத்தை பெறுவதிலோ காங்கிரசுக்கு ஆர்வம் இல்லை என்றார். அவர் மேலும் பேசியதாவது:-

    மாநில அளவில் நம்மிடையே உள்ள கட்சிகளுக்குள் சில வேறுபாடுகள் உள்ளன. அந்த வேறுபாடுகள் சித்தாந்தம் சார்ந்தவை அல்ல. ஆனால் அவை மக்கள் நலனுக்காக ஒதுக்கி வைக்க முடியாத அளவுக்கு பெரிய விஷயம் இல்லை. நாம் 26 கட்சிகள் இருக்கிறோம். 11 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். பாஜக தனித்து 303 இடங்களைப் பெறவில்லை, கூட்டணி கட்சிகளின் வாக்குகளைப் பயன்படுத்தி வெற்றி பெற்று பின்னர் அவற்றை நிராகரித்தது. இப்போது பாஜக தலைவர் மற்றும் அக்கட்சியின் பிற தலைவர்கள் பழைய கூட்டாளிகளுடன் ஒட்டிக்கொள்வதற்காக மாநிலம் விட்டு மாநிலம் வருகின்றனர்.

    இவ்வாறு கார்கே பேசினார்.

    எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் காரணமாக பெங்களூரு நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×