search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆல் சீட் எனக் கூறிய தலைவர்: அப்செட் ஆன ஆம் ஆத்மி- விளக்கம் அளித்த காங்கிரஸ்
    X

    ''ஆல் சீட்'' எனக் கூறிய தலைவர்: அப்செட் ஆன ஆம் ஆத்மி- விளக்கம் அளித்த காங்கிரஸ்

    • ஏழு தொகுதிகளிலும் போட்டியிட தயாராக கேட்டுக்கொண்டதாக காங்கிரஸ் தலைவர் தகவல்
    • தனித்து போட்டி என்றால், இந்தியா கூட்டணி என்? என ஆம் ஆத்மி கேள்வி

    இந்தியா பாராளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. சுமார் ஏழு மாதங்களே உள்ளதால் பா.ஜனதா கட்சி, எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கான வியூகங்களை அமைக்க தொடங்கிவிட்டன.

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், வியூகம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று காங்கிரஸ் கட்சி தலைமை, 18 மாநில கட்சித் தலைவர்களுடன் சுமார் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தியது.

    ஆலோசனைக்குப் பிறகு டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் லம்பா, ''டெல்லியில் உள்ள மக்களவை தொகுதிகளிலும் போட்டியிட தயாராகும்படி தங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    2024 தேர்தலுக்கு எப்படி தயாராக வேண்டும் என எங்களுக்கு கூறப்பட்டது. டெல்லி மாநில ஆலோசனைக்கு முன், தலைமை 18 மாநில தலைவர்களை சந்தித்து பேசியது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் உடனடியாக பணியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஏழு மாதங்களே உள்ளது. ஏழு தொகுதிகளுக்காக அனைத்து தொண்டர்களும் தயாராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது'' எனத் தெரிவித்தார்.

    இதனால் ஆச்சர்யம் அடைந்த ஆம் ஆத்மி, கட்சிகள் தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டால், I.N.D.I.A. கூட்டணி தேவையா? எனவும் கேள்வி எழுப்பியது.

    உடனடியாக இதுகுறித்து டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பாபரியா ''லம்பா கூறியது அவரது கருத்தாகும். கூட்டத்தில் இடம் பகிர்வு குறித்து எந்த திட்டமும் இல்லை. டெல்லியில் கட்சியை எப்படி வலுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது'' என்றார்.

    இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் ஆகியோர் மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வருகிற 19-ந்தேதி மற்றும் 20-ந்தேதி பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

    பா.ஜனதாவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இடம் பிடித்துள்ளன. பா.ஜனதா- காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடி மோதல் உள்ள இடங்களில் ஆம் ஆத்மி கட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி, எப்படியும் அதிக இடங்களில் போட்டியிட விரும்பும்.

    இந்த விவகாரம் I.N.D.I.A. கூட்டணியில் கருத்து மோதலை உருவாக்க முக்கிய காரணமாக கருதப்படும் சீட் பகிர்வின் முதற்படி என பார்க்கப்படுகிறது.

    இதுபோன்று பல மாநிலங்களில் காங்கிரஸ், மாநில கட்சிகள் இடையே முரண்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. முரண்பாடுகள் அனைத்தும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டால், பா.ஜனதா கூட்டணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    Next Story
    ×