என் மலர்
இந்தியா

உச்சநீதிமன்றத்தால் உள்நாட்டு போர்.. பாஜக எம்.பி பேச்சு - மோடி மவுனம் காப்பது ஏன்? - காங்கிரஸ் கேள்வி
- சமூகம், நிறுவனம் மற்றும் தனிநபர்கள் என அனைத்தையும் இவர்கள் இருவரும் இகழ்வாக பேசி வருகின்றனர்.
- அவர்களுக்கு ஆதரவு இல்லையெனில் பிரதமர் அமைதியாக இருப்பது ஏன்?
மசோதாக்களை நிலுவையில் வைத்தது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோர் சாடி இருந்தனர்.
சுப்ரீம் கோர்ட்டே சட்டங்களை இயற்ற வேண்டி இருந்தால் பாராளுமன்ற கட்டிடத்தை இழுத்து மூட வேண்டும். இந்தியாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட உச்ச நீதிமன்றம்தான் காரணமாக அமையும் என்று நிஷி காந்த் துபே தெரிவித்து இருந்தார். பாஜக எம்.பி.க்களின் கருத்துகளுக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஜே.பி. நட்டா விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், "உச்சநீதிமன்றம் மற்றும் நீதிபதிகளை விமர்சித்து பாஜகவை சேர்ந்த 2 எம்.பி-க்கள் கருத்து கூறினர். அதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என அக்கட்சியின் தலைவர் நட்டா கூறியுள்ளார்.
இந்த இரண்டு எம்.பி-க்கள் தொடர்ந்து வெறுப்பு பேச்சில் ஈடுபட்டு வருகின்றனர். சமூகம், நிறுவனம் மற்றும் தனிநபர்கள் என அனைத்தையும் இவர்கள் இருவரும் இகழ்வாக பேசி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து நட்டாவின் கருத்து வெறும் டேமேஜ் கன்ட்ரோல் தான்.
அந்த இரண்டு எம்.பி-க்களுக்கும் தொடர்ந்து அரசியலமைப்பை விமர்சித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு இல்லையெனில் பிரதமர் அமைதியாக இருப்பது ஏன்? அவர்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? அவர்கள் இருவருக்கும் விளக்கம் கேட்டு நட்டா நோட்டீஸ் அனுப்பியுள்ளாரா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.






