என் மலர்
இந்தியா

கெஜ்ரிவால் புகழ் அதிகரித்து வருவதால் மத்திய அரசு பயந்துள்ளது: ஆம் ஆத்மி எம்.பி. சொல்கிறார்
- நிர்வாகத்தில் அதிகாரிகளை நியமிப்பதில் மத்திய அரசு- கெஜ்ரிவால் இடையே மோதல்
- உச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்த நிலையில், சட்ட திருத்தம்
டெல்லி மாநிலத்தில் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக அம்மாநில துணைநிலை ஆளுநருக்கும், டெல்லி மாநில முதல்வரான கெஜ்ரிவாலுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. இதுதொடர்பாக கெஜ்ரிவால், உச்சநீதிமன்றத்தை நாடினார். அப்போது மாநில அரசுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இதனால் மத்திய அரசு ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை பாராளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்து நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. இன்று சட்டதிருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை எம்.பி. சுஷில் குமார் ரிங்கு கூறுகையில் ''ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மசோதாவிற்கு எதிராக உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற அவைக்கு கொண்டு வந்து, அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வருவது அரசியலமைக்கு எதிரானது. மேலும், அம்பேத்கரின் அரசியலமைப்பை அவமதிப்பதாகும்.
மத்திய அரசு ஆம் ஆத்மி மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் புகழ் அதிகரித்து வருவதை கண்டு பயந்துள்ளது.'' என்றார்.






