என் மலர்tooltip icon

    இந்தியா

    காவிரி விவகாரம்: மத்திய அமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் குழு சந்திப்பு
    X

    காவிரி விவகாரம்: மத்திய அமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் குழு சந்திப்பு

    • காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்து விட கர்நாடக அரசை வலியுறுத்த அறிவுறுத்தினர்.
    • தண்ணீர் விடும் எண்ணம் கர்நாடக அரசுக்கு இல்லை.

    புதுடெல்லி:

    கர்நாடக அரசு, காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு போக்கு காட்டி வருகிறது. இந்த செயலை எதிர்த்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசனைப்படி தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை மற்றும் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை.

    இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்களும் ஒன்றிணைந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்திக்க முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழக எம்.பி.க்கள் குழு இன்று சந்தித்தது.

    இந்த சந்திப்பின்போது, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்து விட கர்நாடக அரசை வலியுறுத்த அறிவுறுத்தினர்.

    தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீர் பங்கீட்டை முறையாக திறந்துவிட கர்நாடகா அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் மத்திய அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.

    இதைத்தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தண்ணீர் இருந்தும் கொடுப்பதற்கு கர்நாடக அரசு மறுக்கிறது. தண்ணீர் விடும் எண்ணம் கர்நாடக அரசுக்கு இல்லை.

    தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும். காவிரி விவகாரத்தில் மத்திய அரசு என்ன செய்ய போகிறது என மத்திய அமைச்சரை சந்தித்து கேட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×