search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தமிழ்நாட்டுக்கு காவிரியில் மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை
    X

    தமிழ்நாட்டுக்கு காவிரியில் மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை

    • கடந்த காலங்களை ஒப்பிடும்போது கர்நாடகத்தின் 4 அணைகளிலும் 54 சதவீத அளவுக்கு தண்ணீர் குறைவாக இருப்பதாக தெரிவித்தனர்.
    • காவிரி அணைகளுக்கு எவ்வளவு நீர் வருகிறது, வெளியேற்றப்படும் நீரின் அளவு எவ்வளவு என்பதை மூடிமறைக்க முடியாது.

    புதுடெல்லி:

    தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே காவிரி விவகாரம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    உரிய தண்ணீர் இன்றி டெல்டா பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகி வருகின்றன. ஆனால் தண்ணீர் தர கர்நாடக அரசு மறுத்து வருகிறது.

    காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் இவ்வாறு கர்நாடக அரசு பிடிவாதம் செய்துவந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதி பதிகள், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளில் கோர்ட்டு தலையிட முடியாது என கூறிவிட்டனர். இதனால் காவிரி மேலாண்மை ஆணையம், வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டும் என ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மீறமுடியாத சூழ்நிலை கர்நாடகத்துக்கு ஏற்பட்டு உள்ளது.

    இதனையடுத்து காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டுள்ளது.

    இதற்கிடையே கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கப்படுவதை எதிர்த்து கர்நாடக விவசாயிகள் அங்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 87-வது கூட்டம் காணொலி காட்சி மூலம் டெல்லியில் இருந்து நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒழுங்காற்று குழு தலைவர் வினீத் குப்தா தலைமை தாங்கினார். காவிரியோடு தொடர்புடைய 4 மாநில அதிகாரிகளும் அந்தந்த மாநிலங்களில் இருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். கூட்டம் நேற்று காலை 11.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது.

    கூட்டத்தின் தொடக்கத்தில் வழக்கமான நிகழ்ச்சி நிரலின்படி, 4 மாநிலங்களிலும் பெய்த மழையின் அளவு, அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பின் விவரம் மற்றும் பாசனத்துக்கு திறந்துவிடப்பட்ட நீரின் அளவு போன்ற தரவுகளை ஒழுங்காற்று குழு அதிகாரிகள் சேகரித்தனர்.

    அதைத் தொடர்ந்து நீர் பங்கீடு தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது, 'செப்டம்பர் மாதம் வரை 123.14 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் வழங்க வேண்டும். ஆனால் தற்போது வரை 40 டி.எம்.சி. மட்டுமே வழங்கியுள்ளது. எனவே இந்த பற்றாக்குறையை சமன் செய்ய காவிரியில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்' என்று தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.

    ஆனால் கர்நாடக அரசு தரப்பில் பங்கேற்ற அதிகாரிகள் அதை மறுத்து, 'தமிழ்நாட்டுக்கு இனி தண்ணீர் திறக்க வழி இல்லை' என கூறினர். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பற்றாக்குறை இன்னும் நீடிப்பதாகவும், கடந்த காலங்களை ஒப்பிடும்போது கர்நாடகத்தின் 4 அணைகளிலும் 54 சதவீத அளவுக்கு தண்ணீர் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    மேலும் 161 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளன என்று தெரிவித்த அவர்கள், அதனால்தான் தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்கிறோம் என்று விளக்கம் அளித்தனர்.

    இருந்தாலும் ஒழுங்காற்று குழு அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தண்ணீர் பற்றாக்குறை என்பது சரியானதுதான். ஆனாலும் தமிழ்நாட்டின் நிலையையும் பார்க்க வேண்டும் என கூறி, 3 ஆயிரம் கனஅடி வீதம் மேலும் 15 நாட்களுக்கு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு பரிந்துரைத்தனர்.

    இதுதொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

    இதற்கிடையே கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி அணைகளுக்கு எவ்வளவு நீர் வருகிறது, வெளியேற்றப்படும் நீரின் அளவு எவ்வளவு என்பதை மூடிமறைக்க முடியாது. ஒகேனக்கல் பிலிகுண்டுலு அளவீட்டு மையத்தில் நீர்வரத்து குறித்த விவரங்கள் பதிவாகிறது. இதை 2 மாநில அதிகாரிகளும் கவனித்து கொண்டு இருக்கிறார்கள். தமிழகம் வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று கேட்கிறது. எங்களால் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் கூட வழங்க முடியாத நிலையில் உள்ளோம்.

    அதனால் நீர்வரத்து, நீர்வெளியேற்றம் குறித்த விஷயத்தில் பொய் சொல்ல முடியாது. நாம் பொய் சொன்னால் உண்மை தகவல்களை அதிகாரிகள் கூறுவார்கள். நாம் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள். பெங்களூருவை சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது மழை பெய்துள்ளதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக அதிகாரிகள் உண்மை தகவல்களை எடுத்து வைத்துள்ளனர். தமிழக அரசு வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடி நீர் கேட்டுள்ளது. அதை ஒழுங்காற்று குழு நிராகரித்துள்ளது. இது கர்நாடக மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

    காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக எப்போதும் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் சென்று கொண்டிருக்கும். அணையில் இருந்து கூடுதலாக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறந்தால் போதும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    Next Story
    ×