என் மலர்
இந்தியா

6 நாளாக பாகிஸ்தான் படையிடம் சிக்கித் தவிக்கும் BSF வீரர்.. எப்போ காப்பாத்துவீங்க? - காங்கிரஸ் கேள்வி
- ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து கான்ஸ்டபிள் சாஹுவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்தனர்.
- அவரது குடும்பத்தினர் பதில்களுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
கடந்த வாரம் பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹு என்பவர் தவறுதலாக சென்று மாட்டிக்கொண்டார்.
பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து BSF கான்ஸ்டபிள் சாஹுவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்தனர்.
எல்லைக்கு அருகே விவசாயிகள் குழுவை அழைத்துச் சென்ற சாஹு, ஒரு மரத்தின் கீழ் ஓய்வெடுக்கச் சென்று, தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக BSF அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவர் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று காங்கிரஸ் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி உள்ளது..
இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, BSF கான்ஸ்டபிள் பாகிஸ்தான் ரேஞ்சர்களால் தடுத்து வைக்கப்பட்டு ஆறு நாட்கள் ஆகின்றன.
அவரது குடும்பத்தினர் பதில்களுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். அவர் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சாஹுவின் விடுதலை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்திய மற்றும் பாகிஸ்தான் எல்லைப் படைகள் கூட்டத்தை நடத்திய போதிலும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை என்று தெரிகிறது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22 அன்று 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் மோசமடைந்துள்ள நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






