என் மலர்
இந்தியா

அரியானா தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் திருட்டு: ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு சிம்பிளாக பதில் அளித்த பாஜக
- அரியானா தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு.
- பீகாரை பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை. ஆகவே, கதையை அரியானாவுக்கு மாற்றுகிறார்.
வாக்கு திருட்டு தொடர்பாக தன்னிடம் ஹைட்ரஜன் குண்டு உள்ளது. அதை பயன்படுத்தினால், மோடி ஆட்டம் கண்டுவிடுவார் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று அரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த வாக்கு திருட்டு மோசடி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அரியானா தேர்தலில் முறைகேடு நடைபெற்றது. காங்கிரசின் வெற்றியை பா.ஜனதாவின் வெற்றியாக மாற்றம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டது.
அரியானாவில் ஒரே நபர் 10 வாக்குச்சாவடியில் 22 முறை வாக்களித்து உள்ளார். 22 முறை வாக்களித்த நபரின் புகைப்படம் பிரேசிலை சேர்ந்த மாடல் ஒருவருடையது.
அரியானாவில் மொத்த வாக்காளர்களில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டு உள்ளன. மொத்த வாக்குகளில் 12.5 சதவீத வாக்குகள் திருடப்பட்டுள்ளது. 8-ல் ஒரு வாக்கு அரியானா தேர்தலில் திருடப்பட்டது. முகவரியே இல்லாமல் 93 ஆயிரம் வாக்குகள் இருந்தது.
ஒரே நபர் வெவ்வேறு அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்கு அளித்துள்ளனர். பாதாஸ்பூர் என்ற இடத்தில் 14 முறை ஒருவர் வாக்கு அளித்துள்ளார். வாக்கு திருட்டால்தான் அரியானாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
ஜனநாயகத்தை அழிப்பதில் பா.ஜனதாவின் புதிய ஆயுதம் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) ஆகும். மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் இதே மோசடி நடந்தது. அனைத்து கருத்து கணிப்பும் காங்கிரசுக்கே வெற்றி என கூறின. மோசடிகள் நடக்காமல் இருந்தால் அரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கும்.
வாக்கு திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பொய் சொல்கிறது. முக்கிய கண்காணிப்பு கேமரா ஆவணங்களை தேர்தல் ஆணையம் அழித்து உள்ளது. முறைகேடுகளால்தான் கண்காணிப்பு கேமரா காட்சிகளை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. போலி புகைப்படங்களை நீக்கும் மென்பொருள் வசதி தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. ஒரே நபர் ஒரே நாளில் பல வாக்குகளை அளிக்க தேர்தல் ஆணையம் எப்படி அனுமதித்தது? வாக்கு திருட்டின் மூலம் பீகாரிலும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் வாக்கு திருட்டு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
வாக்கு திருட்டில் ஈடுபடும் மோடியும், அமித் ஷாவும் பதவியில் இருக்க தகுதியற்றவர்கள். பிரதமர் மோடி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டார். வாக்கு திருட்டு ஒரு தொகுதியிலோ ஒரு மாவட்டத்திலோ மட்டும் அல்ல நாடு முழுவதும் நடக்கிறது.
இவ்வாறு ராகுல்காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதற்கு பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிரண் ரிஜிஜு பதில் அளித்துள்ளார். கிரண் ரிஜிஜு "தேர்தல் பீகாரில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ராகுல் காந்தி அரியானா பற்றி கதைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். பீகாரை பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை. ஆகவே, கதையை அரியானாவுக்கு மாற்றுகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.






