search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜார்கண்ட் அரசை கவிழ்க்க பா.ஜனதா சதி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
    X

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ் கச்சப், நமன் பிக்சல் கொங்காரி, இர்பான் அன்சாரி ஆகியோரை படத்தில் காணலாம்.

    ஜார்கண்ட் அரசை கவிழ்க்க பா.ஜனதா சதி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

    • ஜார்கண்ட் அரசை கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா இழுத்து வருகிறது.
    • காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது.

    புதுடெல்லி :

    ஜார்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ்-ராஷ்டிரீய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    இதற்கிடையே, மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் நேற்று முன்தினம் மாலை, ஒரு கருப்பு நிற சொகுசு காரில் பணம் கடத்தப்படுவதாக அங்குள்ள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஹவுராவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

    ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது, உள்ளே ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சப், நமன் பிக்சல் கொங்காரி ஆகியோர் பயணம் செய்தனர்.

    காரை சோதனையிட்டபோது, கட்டுக்கட்டாக ஏராளமான பணம் சிக்கியது.

    3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் விசாரணைக்கு பிறகு நேற்று பிற்பகலில் கைது செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து பா.ஜனதாவை காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள 'டுவிட்டர்' பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா நடத்த திட்டமிட்டிருந்த 'ஆபரேஷன் தாமரை' திட்டம் அம்பலமாகி விட்டது. மராட்டிய மாநிலத்தில் ஆட்சியை கவிழ்த்ததுபோல், ஜார்கண்ட் மாநிலத்திலும் செய்வதுதான் டெல்லியில் உள்ள இருவரின் சதித்திட்டம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதுபோல், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் மந்திரி ஆலம்கிர் ஆலம் ராஞ்சியில் பேட்டி அளித்தபோது திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    ஜார்கண்ட் அரசை கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா இழுத்து வருகிறது. அங்கு பா.ஜனதா ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தால், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு ரூ.10 கோடியும், மந்திரி பதவியும் அளிக்கப்படும் என்று மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு மேற்கண்ட 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆசை காட்டுகிறார்கள்.

    இதுதொடர்பாக அவர்கள் மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ. குமார் ஜெய்மங்கள், போலீசில் புகார் அளித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அருகில் இருந்த குமார் ஜெய்மங்களும் அதே கருத்தை தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் தவறை மறைக்க போலீசில் அக்கட்சி பொய்ப்புகார் அளித்திருப்பதாக பா.ஜனதா மூத்த தலைவர் பாபுலால் மராண்டி பதில் அளித்துள்ளார்.

    பணம் கைப்பற்றப்பட்ட இடம், மேற்கு வங்காள மாநிலம் என்பதால், அந்த புகாரை மேற்கு வங்காளத்துக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

    இதற்கிடையே, மேற்கு வங்காளத்தில் பணத்துடன் பிடிபட்ட ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும் காங்கிரஸ் மேலிடம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது.

    ஜார்கண்ட் மாநிலத்துக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக கூறினார்.

    Next Story
    ×