search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பஞ்சாப்பில் பா.ஜனதா தனித்து போட்டி
    X

    பஞ்சாப்பில் பா.ஜனதா தனித்து போட்டி

    • பா.ஜனதாவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கால் சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பிர் சிங் பாதல் தொடர்ந்து நழுவி வந்தார்.
    • மக்களின் கருத்துகள், கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

    சண்டிகார்:

    பஞ்சாப்பை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சியான சிரோமணி அகாலிதளம், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகித்து வந்த கட்சிகளில் முக்கியமானது.

    இந்த கட்சி கடந்த 1996-ம் ஆண்டு முதல் பா.ஜனதா கூட்டணி சார்பில் பல்வேறு தேர்தல்களை சந்தித்தது. கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் பஞ்சாப்பில் இந்த இரு கட்சிகளும் தலா 2 இடங்களை வென்றிருந்தன.

    ஆனால் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை சிரோமணி அகாலிதளம் கடுமையாக எதிர்த்தது. அத்துடன் பா.ஜனதாவுடனான உறவையும் கடந்த 2020-ம் ஆண்டு முறித்துக்கொண்டது.

    எனினும் வருகிற மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட இரு கட்சிகளும் விரும்பின. அதன்படி இரு கட்சிகளும் கடந்த சில நாட்களாக கூட்டணி பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருந்தன.

    இந்த பேச்சுவார்த்தையை பா.ஜனதா மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷாவும் உறுதி செய்திருந்தார். தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த அனைத்து கட்சிகளும் இணைய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் கூறியிருந்தார்.

    அதேநேரம் பா.ஜனதாவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கால் சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பிர் சிங் பாதல் தொடர்ந்து நழுவி வந்தார்.

    இந்த நிலையில் இரு கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்கு பா.ஜனதா தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளது.

    இதை கட்சியின் மாநில தலைவர் சுனில் ஜாக்கர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் பஞ்சாப்பில் பா.ஜனதா தனித்து போட்டியிடுகிறது.

    மக்களின் கருத்துகள், கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப்பின் எதிர்காலம், இளைஞர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

    பஞ்சாப் மக்கள் ஜூன் 1-ந் தேதி அதிக எண்ணிக்கையில் பா.ஜனதாவுக்கு வாக்களிப்பதன் மூலம் கட்சியை மேலும் வலுப்படுத்துவார்கள்.

    பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பஞ்சாப்புக்கு பா.ஜனதா ஆற்றிய பணிகள் யாருக்கும் மறைக்கப்படவில்லை.

    இவ்வாறு சுனில் ஜாக்கர் கூறியுள்ளார்.

    பா.ஜனதா தனித்து போட்டியிடுவதன் மூலம் பஞ்சாப்பில் 4 முனை போட்டி உறுதியாகி இருக்கிறது.

    அந்தவகையில் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம் மற்றும் பா.ஜனதா கட்சிகள் தனித்தனியாக தேர்தலை சந்திக்கின்றன.

    Next Story
    ×