என் மலர்
இந்தியா

வாக்காளர் பட்டியலில் தற்போது தீவிர சரிபார்ப்பு செய்ய வேண்டிய அவசியம் என்ன? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி
- தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
- தேர்தல் இல்லாத நேரங்களில் இதுபோன்ற சரிபார்ப்பு பணிகளை தேர்தல் ஆணையம் செய்திருக்கலாமே?
பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வரும் நவம்பர் மாதத்திற்குள் வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் செய்யப்படும் என்று கடந்த ஜூன் 24-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.
சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் மாதத்திற்குள் நடைபெற உள்ள நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் ஜூலை 1-ந் தேதி முதல் மேற்கொள்ளப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மேலும், வாக்காளர்கள் தேவையான ஆவணங்களை வழங்கினால், வாக்காளர் பதிவு அதிகாரியின் சரிபார்ப்பு பணிகள் எளிதாக இருக்கும். ஒருவேளை தேவையான ஆவணங்களை வழங்க முடியாவிட்டால், உள்ளூர் விசாரணை அல்லது பிற ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். இறுதியில் தேர்தல் பதிவு அதிகாரி முடிவெடுப்பார் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பீகாரில் உள்ள பெரும்பாலான வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இருக்கக் குடியுரிமைச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி பொதுநல மனு ஒன்றை ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
வாக்களிக்கும் அடிப்படைக்கு பாதகமாக விதிமுறைகள் உள்ளதாக மனுதாரர்கள் கூறியதற்கு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன? என்றும் பீகார் மாநிலத்தில் நவம்பரில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்போது தீவிர சரிபார்ப்பை செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது. தேர்தல் இல்லாத நேரங்களில் இதுபோன்ற சரிபார்ப்பு பணிகளை தேர்தல் ஆணையம் செய்திருக்கலாமே? என்று கேட்டனர்.
பீகாரில் மட்டுமல்ல நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.






