என் மலர்
இந்தியா

பீகார் சட்டசபை தேர்தல்: வரும் 24ம் தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
- பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சிகள் இரண்டும் தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன.
- பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 24ம் தேதி தொடங்குகிறார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் 14-ம் தேதி எண்ணப்பட உள்ளன.
பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சிகள் இரண்டும் தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மத்திய மந்திரி சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 29 இடங்களிலும், உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா மற்றும் மத்திய மந்திரி ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) ஆகிய கட்சிகள் தலா ஆறு இடங்களில் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 24ம் தேதி தொடங்குகிறார்.
இதுதொடர்பாக, பா.ஜ.க. மாநிலத் தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் பாட்னாவில் அளித்த பேட்டியில், பீகார் சட்டசபைத் தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி வரும் 24ம் தேதி சமஸ்திபுராவில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். அன்றைய தினமே பெகுசராயில் பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார். இந்த மாத இறுதிக்குள் 4 பிரச்சாரப் பேரணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய மந்திரி அமித்ஷா பீகாரில் முகாமிட்டு 25 பொதுக்கூட்டங்களில் பேச இருக்கிறார். மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி ஆகியோரும் 20 கூட்டங்களுக்கு குறையாமல் கலந்து கொண்டு ஆதரவு திரட்டுவார்கள்.
பா.ஜ.க. கூட்டணி தொண்டர்கள் அனைவரும் தேர்தல் பணிகளை உற்சாகமாக செய்து வருகிறார்கள். மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் தேர்தல் பிரசார பணிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார்கள். பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்கள் செல்லும் இடங்களில் மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரள்வதன் மூலம் எங்கள் கூட்டணி வெற்றி மீண்டும் உறுதியாகி இருக்கிறது என தெரிவித்தார்.






