என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகாரில் காங்கிரஸ்-ஆர்.ஜே.டி. கட்சிகள் காட்டு ராஜ்ஜியத்தை நடத்தின: பிரதமர் மோடி கடும் தாக்கு
    X

    பீகாரில் காங்கிரஸ்-ஆர்.ஜே.டி. கட்சிகள் காட்டு ராஜ்ஜியத்தை நடத்தின: பிரதமர் மோடி கடும் தாக்கு

    • தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் பீகாரின் வளர்ச்சி இன்னும் வேகமடையும்.
    • அரசியலமைப்பின் நகலை கையில் வைத்திருப்பவர்கள் மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள்.

    பாட்னா:

    பீகார் சட்டசபை தேர்தல் வருகிற நவம்பர் 6 மற்றும் 11-ந்தேதிகளில் இரு கட்டங்களாக நடக்கிறது. இதையடுத்து கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பிரதமர் மோடி இன்று பீகாரில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இதற்காக அவர் இன்று காலை பீகாரின் சமஷ்டிபூருக்கு சென்றார். அவரை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் வரவேற்றார். சமஷ்டிபூரில் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பு, மறைந்த முன்னாள் முதல்-மந்திரியான பாரத ரத்னா கர்பூரி தாக்கூரின் பிறந்த கிராமத்துக்கு சென்று அங்கு உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது கர்பூரி தாகூரின் குடும்பத்தினரை சந்தித்து உரையாடினார்.

    பின்னர் சமஷ்டிபூரில் நடந்த பொது கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவருக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. அதன்பின் பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது:-

    பாரத ரத்னா கர்பூரி தாக்கூரின் ஆசீர்வாதத்துடன் இங்கு வந்திருக்கிறேன். அவர் சமூகத்தின் நலிந்த பிரிவினரை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். எங்களுக்கு உத்வேகம் அளித்தார். அவரை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கவுரவித்தது.

    மொத்த பீகார் மாநிலமும் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்புகிறது. பீகாரில் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதாதளம் காட்டு ராஜ்ஜியத்தை நடத்தி வந்தன. இவர்கள் ஆயிரக்கணக்கான கோடி மதிப்பு உள்ள மோசடிகளில் ஜாமீனில் வெளியே உள்ளனர்.

    காட்டு ராஜ்ஜியத்தில் இருந்து பீகார் விலக்கி வைக்கப்பட்டே இருக்கும். இதற்கு நீங்கள் நல்லாட்சி அளிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் பீகாரின் வளர்ச்சி இன்னும் வேகமடையும். அரசியலமைப்பின் நகலை கையில் வைத்திருப்பவர்கள் மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள்.

    இந்த முறை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி அதன் முந்தைய வெற்றி சாதனைகளை முறியடிக்கும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பீகார் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை வழங்கும்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    அதன்பின் மதியம் 2 மணிக்கு பெகுசராயில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசினார்.

    பிரதமர் மோடி வருகிற 30-ந் தேதி முசாபர்பூர், சாப்ரா ஆகிய நகரங்களில் நடக்கும் பிரசார கூட்டங்களில் பேசுகிறார். பின்னர் நவம்பர் 2, 3, 6 மற்றும் 7-ந் தேதிகளிலும் பிரசார கூட்டங்களில் பங்கேற்கிறார்.



    Next Story
    ×