என் மலர்
இந்தியா

தெலுங்கானாவில் அரசு விழாவில் நாற்காலி, முட்டைகள் வீசி தாக்குதல்- எம்.எல்.ஏ. கைது
- போலீசாருக்கும் பி.ஆர்.எஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- விழா நடைபெற இருந்த இடம் போர்க்களம் போல் காட்சி அளித்தது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஜங்கான் மாவட்டத்தில் மாநில அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அறிவிக்கப்பட்டு இருந்தது.
விழாவில் வருவாய்த்துறை மந்திரி பொங்கு லேடி சீனிவாஸ் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நல திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடுகள் நடந்தன.
அப்போது சம்பவ இடத்திற்கு பி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ பல்லா ராஜேஸ்வர் ரெட்டி தனது கட்சி ஆதரவாளர்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எம்.எல்.ஏவை தடுத்து நிறுத்தினர்.
இதனால் போலீசாருக்கும் பி.ஆர்.எஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பி.ஆர்.எஸ் கட்சியினர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், முதல் மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
இதனால் காங்கிரஸ் கட்சியினருக்கும், பி. ஆர்.எஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. ஒருவரை ஒருவர் பிளாஸ்டிக் நாற்காலிகளால் தாக்கிக் கொண்டனர்.
அப்போது காங்கிரஸ் கட்சியினர் எம்.எல்.ஏ. பல்லா ராஜேஷ்வர் ரெட்டி மீது முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
விழா நடைபெற இருந்த இடம் போர்க்களம் போல் காட்சி அளித்தது. போலீசார் மோதலை தடுப்பதற்காக தடியடி நடத்தி கலைத்தனர்.
பின்னர் மோதலுக்கு காரணமான எம்.எல்.ஏ. பல்லா ராஜேஷ்வர் ரெட்டி எம்.எல்.ஏ., மற்றும் பி.ஆர்.எஸ். முக்கிய தலைவர்களை கைது செய்தனர்.






