என் மலர்
இந்தியா

முஸ்லிம் முதல்வர் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பாதது அவமானம்: மெகபூபா முஃப்தி
- ஜம்மு-காஷ்மீரில் வக்பு திருத்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் எனச் சொல்லியிருக்க வேண்டும்.
- அதுபோன்று ஏதும் நடக்கவில்லை. நான் இன்று அவமானமாக உணர்கிறேன்.
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வக்பு திருத்த சட்டம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் ஒத்திவைப்பு தீர்மானம் சபாநாயரால் நிராகரிக்கப்பட்டது. இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. அவை ஒத்திவைக்கப்படடது.
இதற்கிடையில் பாஜக-வின் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டத்தில், உமர் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி அரசு அடிபணிந்து விட்டது என ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக மெகபூபா முஃப்தி கூறியதாவது:-
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு மாநிலமான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முஸ்லிம் முதல்வர் (உமர் அப்துல்லா) வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக குரல் கொடுத்திருக்கனும். அல்லது குறைந்தபட்சமாக ஜம்மு-காஷ்மீரில் இந்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் எனச் சொல்லியிருக்க வேண்டும்.
வக்பு மசோதா மீதான தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்தது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. வக்பு மசோதாவை உறுதியாக எதிர்த்த தமிழ்நாட்டிடம் இருந்து தேசிய மாநாடு கட்சி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். வலுவான மெஜாரிட்டி பெற்ற போதிலும், முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக-வின் திட்டத்திற்கு முற்றிலுமாக அடிபணிந்ததாக தெரிகிறது.
ஜம்மு-காஷ்மீர் மட்டும்தான் முஸ்லிம் அதிகமாக வாழும் மாநிலம். மக்களை மையமாகக் கொண்ட அரசாங்கமாகக் கூறப்படும் ஒரு அரசாங்கத்திற்கு இந்த முக்கியமான பிரச்சினையை விவாதிக்கக் கூட தைரியம் இல்லை என்பது கவலையளிக்கிறது.
நாட்டில் உள்ள முஸ்லிம் மக்கள் முஸ்லிம் முதல்வர், நாட்டில் அதிக அளவில் வாழும் முஸ்லிம் மாநிலம் இந்த சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பும் அல்லது ஜம்மு-காஷ்மீரில் இந்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என சொல்லும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், அதுபோன்று ஏதும் நடக்கவில்லை. நான் இன்று அவமானமாக உணர்கிறேன்.
இவ்வாறு மெகபூபா முஃப்தி தெரிவித்தார்.