என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா

சுப்ரீம் கோர்ட்டுக்கு 5 நீதிபதிகள் நியமனத்துக்கு விரைவில் ஒப்புதல்: மத்திய அரசு

- தற்போது 27 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
- 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.
புதுடெல்லி :
சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 34 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது 27 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றுகின்றனர். 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த நிலையில், ஐகோர்ட்டுகளில் தலைமை நீதிபதிகளாக பணியாற்றி வருகிற பங்கஜ் மித்தல் (ராஜஸ்தான்), சஞ்சய் கரோல் (பாட்னா), சஞ்சய் குமார் (மணிப்பூர்) மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் அசனுதீன் அமானுல்லா (பாட்னா), மனோஜ் மிஸ்ரா (அலகாபாத்) ஆகிய 5 பேரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் கடந்த டிசம்பர் மாதம் 13-ந் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
தொடர்ந்து, கடந்த மாதம் 31-ந் தேதியன்று, அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டலையும், குஜராத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அரவிந்த் குமாரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியம் செய்துள்ள பரிந்துரைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஏ.எஸ்.ஒகா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் தரப்பில் அட்டார்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஆஜரானார்.
அப்போது அவரிடம் நீதிபதிகள், "சுப்ரீம் கோர்ட்டுக்கு 5 நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செய்யப்பட்டது. இது பிப்ரவரி மாதம். அந்த 5 நீதிபதிகள் நியமனத்துக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுவிடும் என்று நாங்கள் பதிவு செய்து கொள்ளலாமா? அப்படியென்றால் எப்போது என்பது அடுத்த கேள்வி" என கூறினர்.
அதற்கு அட்டார்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, "5 நீதிபதிகள் நியமன உத்தரவு விரைவில் (ஞாயிற்றுக்கிழமைவாக்கில்) வந்து விடும்" என்று பதில் அளித்தார்.
தொடர்ந்து நீதிபதிகள், ஐகோர்ட்டு நீதிபதிகள் இடமாற்றத்தில் செய்துள்ள பரிந்துரைகள் மீதான ஒப்புதல் தாமதித்து வருவது தொடர்பாக வருத்தம் தெரிவித்தனர்.
மேலும், "இது மிக மிக முக்கியமான பிரச்சினை. இதில் எங்களை ஒரு கடினமான நிலை எடுக்க வைத்து விடாதீர்கள்" என்று கூறினர்.
இதற்கு அட்டார்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி பதில் அளிக்கையில், "இந்த விவகாரத்தை சற்று ஒத்தி போட வேண்டும்" என கூறினார்.
அதற்கு நீதிபதிகள், "இது எங்களை மிகவும் கஷ்டப்படுத்துகிறது. இடமாற்ற உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?" என கேட்டனர். மேலும், "நாங்கள் அவர்களுக்கான நீதித்துறை பணியை திரும்பப்பெறுகிறோம். இதைத்தானே நீங்கள் விரும்புகிறீர்கள்? ஐகோர்ட்டில் பணிபுரிவதற்கு சரியான நபர்கள் என்று கொலீஜியம் முடிவு செய்கிறபோது, அந்த இடமாற்றங்களை அரசு கிடப்பில் போடுகிறது. இதுமிக தீவிரமான விஷயம். இதில் 3-வது நபர் ஆட்டம் போட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என கண்டிப்புடன் கூறினர்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நீதிபதிகள் வரும் 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
