என் மலர்
இந்தியா

விமானப்படை அதிகாரி வாலிபரை கொடூரமாக தாக்கும் புதிய வீடியோ வெளியீடு- கொலை முயற்சி வழக்குப்பதிவு
- தொடர்ந்து 2 வாலிபர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கினார்.
- இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
பெங்களூரு:
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா விமானப்படை தளத்தில் விங் கமாண்டர் ஆக பணியாற்றி வருபவர் ஷிலாத்தியா போஸ். இவரது மனைவி மதுமிதா தத்தா. இவர் பெங்களூரு ராமன் நகரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு (டி.ஆர்.டி.ஓ) சொந்தமான குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் ஷிலாத்தியா போஸ் பெங்களூருவில் உள்ள தனது மனைவியை பார்க்க வந்திருந்தார். நேற்று காலை 6 மணியளவில் போஸ் உடல் நிலை சரியில்லாத தனது தந்தையை பார்ப்பதற்காக கொல்கத்தாவுக்கு செல்ல வேண்டி பெங்களூரு விமான நிலையத்திற்கு மனைவியுடன் காரில் புறப்பட்டார். காரை மதுமிதா ஓட்டினார்.
விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது பழைய மெட்ராஸ் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகம் முன்பு மோட்டார்சைக்கிள் ஒன்று காரை முந்தி சென்றது.
அப்போது கார், மோட்டார்சைக்கிள் மீது உரசியது. இதனால் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் திரும்ப வந்து காரை வழிமறித்தனர். பின்னர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி காரில் இடது பக்கத்தில் அமர்ந்திருந்த போஸை கையால் தாக்கினர்.
மேலும் அருகில் கிடந்த கல்லால் தலையில் பலமாக தாக்கப்பட்டார். வாலிபர்கள் தாக்கியதில் சிலாத்தியா போசின் தலை, மூக்கில் காயம் ஏற்பட்டது.
இந்த விவகாரம் குறித்து போஸ் கர்நாடகம் ஏன் இப்படி ஆனது. என்னால் நம்பவே முடியவில்லை. கடவுள் நமக்கு உதவுவார். தாக்குதல் நடத்திய நபரை கைது செய்ய வேண்டும்.
போலீசார் சரியாக பதிலளிக்கவில்லை என்று கூறி ஒரு வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.
இதுகுறித்து போஸின் மனைவி மதுமிதா தத்தா பையப்பனஹள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரில் வாலிபர்கள் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளின் பதிவு எண்ணை குறிப்பிட்டு இருந்தார்.
விசாரணையில் போஸ் மீது தாக்குதல் நடத்தியவர் தனியார் நிறுவனத்தில் தொழில் நுட்ப வல்லுநராக பணியாற்றும் என்ஜினீயர் விகாஸ்குமார் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரது நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் விமானப்படை அதிகாரி ஷிலாத்தியா போஸ் தொழில்நுட்ப வல்லுநர் விகாஸ்குமாரை கொடூரமாக தாக்கிய புதிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில் போஸ் விகாஸ்குமாரின் சட்டை காலரை பிடித்து கையை கொண்டு பல முறை குத்தியதும், விகாஸ்குமார் கீழே விழுந்த பிறகும் நிற்காமல் கால்களை கொண்டு உதைத்த காட்சிகளும் பதிவாகி இருந்தது.
அதோடு இல்லாமல் விகாஸ்சின் மோட்டார்சைக்கிளின் சாவியையும் பறித்து எறிந்தார். தொடர்ந்து 2 வாலிபர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கினார். உள்ளூர் மக்கள் சண்டையை விலக்கி விட போராடும் காட்சிகளும் அதில் பதிவாகி இருந்தன.
இதையடுத்து விமானப்படை அதிகாரி போஸ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து பையப்பனஹள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பெங்களூரு கிழக்கு பிரிவு துணை போலீஸ் கமிஷனர் தேவராஜ் கூறுகையில், விமானப்படை விங் கமாண்டர் ஷிலாத்தியா போஸ் மீது மொழி பிரச்சினை தொடர்பாக தாக்குதல் நடைபெறவில்லை.
காரும், மோட்டார்சைக்கிளும் உரசியதால் தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது என தெரிவித்தார்.
ஷிலாத்தியா போஸ், தொழில்நுட்ப வல்லுநர் விகாஸ்குமாரை கொடூரமாக தாக்கி விரட்டியடிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






