என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற மேல்சபையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் இன்று பதவி ஏற்றனர்
    X

    பாராளுமன்ற மேல்சபையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் இன்று பதவி ஏற்றனர்

    • அ.தி.மு.க. மேல் சபை எம்.பி.யாக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட ஐ.எஸ். இன்பதுரை அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளராக இருந்து வருகிறார்.
    • அ.தி.மு.க. சார்பில் இன்னொரு மேல்-சபை எம்.பி.யாக பதவியேற்றுள்ள தனபால் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மேல்-சபையில் எம்.பி.க்களாக இருக்கும் தமிழர்களில் 6 பேரின் பதவிக்காலம் கடந்த 24-ந்தேதி நிறைவுபெற்றது. இதையடுத்து புதிய எம்.பி.க்களாக தி.மு.க.வைச் சேர்ந்த வில்சன், சல்மா, சிவலிங்கம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் எம்.பி.யாக தேர்வானார். இவர்கள் 4 பேரும் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர்.

    அ.தி.மு.க. சார்பில் இன்பதுரை, தனபால் ஆகிய இருவரும் புதிய எம்.பி.க்களாக தேர்வாகி இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் 28-ந்தேதி பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று (திங்கட்கிழமை) அவர்கள் மேல் சபையில் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு மேல்சபை துணைத் தலைவர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைத்தார்.

    அ.தி.மு.க. மேல் சபை எம்.பி.யாக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட ஐ.எஸ். இன்பதுரை அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளராக இருந்து வருகிறார்.

    நெல்லை மாவட்டம் நாலுமாவடியை சேர்ந்த இவர் அ.தி.மு.க.வில் சிறுபான்மை பிரிவு ,தேர்தல் பிரிவு ஆகியவற்றிலும் பொறுப்புக்களை வகித்திருக்கிறார்.

    கடந்த 2023-ம் ஆண்டு முதல் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளராக பணியாற்றி வரும் இன்பதுரை அ.தி.மு.க. தொடர்பான பல்வேறு வழக்குகளில் ஆஜராகி திறம்பட வாதாடி வெற்றி தேடி தந்திருக்கிறார்.

    அரசு பிளீடர்,தமிழ்நாடு மின்வாரிய நிலை குழு பொறுப்புகளையும் இவர் வகித்துள்ளார். தென் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2021-ல் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே அங்கு தோல்வியை தழுவினார்.

    இந்த நிலையில் தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி , இன்பதுரையை மேல்சபை எம்.பி.யாக்கி உள்ளார்.

    இதன்மூலம் தமிழகத்தில் மட்டுமே ஒலித்து வந்த வக்கீல் இன்பதுரையின் குரல் இனி டெல்லி மேல் சபையிலும் தமிழகத்தின் குரலாக வலுவாகவே ஒலிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அ.தி.மு.க. சார்பில் இன்னொரு மேல்-சபை எம்.பி.யாக பதவியேற்றுள்ள தனபால் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போது ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார்.

    திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் 1991-ம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. வேட்பாளர் சொக்கலிங்கம் மற்றும் பா.ம.க. வேட்பாளர் பழனிச்சாமி ஆகிய இருவரையும் தோற்கடித்து 56 சதவீத வாக்குகளை பெற்று தனபால் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×