என் மலர்
இந்தியா

டெல்லியைத் தொடர்ந்து பீகார் தேர்தலிலும் வாக்களித்த பா.ஜ.க. நிர்வாகிகள்- ஆம் ஆத்மி பகிரங்க குற்றச்சாட்டு
- நேற்று பீகாரில் மாநிலத்தில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
- புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டு ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் தேர்தல்களில் மிகப்பெரிய அளவில் வாக்கு திருட்டு நடந்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
அந்தவகையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் மகாதேவ்புரா சட்டசபை தொகுதியில் மட்டும் 1 லட்சத்துக்கு அதிகமான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு இருந்தாக குற்றம் சாட்டினார். அத்துடன் ஆலந்த் தொகுதியில் 6 ஆயிரத்துக்கு அதிகமான வாக்காளர்களை நீக்க முயற்சி நடந்ததாக பகீர் தகவலை வெளியிட்டு இருந்தார்.
மேலும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு வலுவூட்டும் வகையில் பல்வேறு தரவுகளையும் அவர் செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.
தற்போது தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அரியானாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் 25 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்கு திருட்டு நடந்திருப்பதாக நேற்றுமுன் தினம் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நேற்று பீகாரில் மாநிலத்தில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 64.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது, கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக 60 சதவீதத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது.
இதனிடையே, நேற்று நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தலில், பா.ஜ.க. எம்.பி. ராகேஷ் சின்ஹா, பூர்வாஞ்சல் மோர்ச்சா டெல்லி தலைவர் சந்தோஷ் ஓஹா என டெல்லியை சேர்ந்த பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகிகள் பலரும் டெல்லி தேர்தலில் வாக்களித்து இருந்தார்கள். இவர்கள் அனைவரும் தற்பொழுது பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் வாக்களித்துள்ளனர்.
இது தொடர்பான புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டு ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
அனைவருக்கும் தெரிந்த நிர்வாகிகளே இவ்வளவு தைரியமாக கள்ள ஓட்டு போடுகிறார்கள் என்றால் இன்னும் எத்தனை ஆயிரம் பேர் இப்படி வாக்களித்து இருப்பார்கள் எனவும் ஆம் ஆத்மி கட்சி சந்தேகத்தை எழுப்பி உள்ளது.






