என் மலர்
இந்தியா

ஊருக்குள் புகுந்த சிறுத்தை கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ள காட்சி.
ஊருக்குள் நுழைந்த சிறுத்தை; நாய்கள் விரட்டியதால் பரபரப்பு
- பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை காணப்படுவது இது முதல் முறையல்ல.
- கடந்த ஆண்டும் புறநகரில் சிறுத்தை நடமாட்டம் குறித்த காட்சிகள் பலமுறை பதிவாகி இருந்தன.
பெங்களூரு:
பெங்களூரு பொம்மனஹள்ளி அருகே கூட்லு கேட் பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இதனால் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அடிக்கடி காணப்படுகிறது.
இந்த நிலையில் கூட்லு கேட் பகுதியில் இருந்து நகர பகுதியான ஓசூர் சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடிய காட்சி அங்கிருந்த வீட்டில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதில் ஒரு வீட்டின் அருகே சாலையில் சிறுத்தை ஒன்று தென்படுகிறது.
அப்போது அந்த சாலையில் உள்ள தெருநாய்கள் விரட்டியதும் சிறுத்தை அங்கிருந்து தப்பி விடுகிறது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் கூட்லு கேட் பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
இதனை தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க தென்கிழக்கு பெங்களூருவில் உள்ள ஏஇசிஎஸ் லேஅவுட், சிங்கசந்திரா, குட்லு கேட் ஆகிய பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் குழு தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், சிறுத்தை இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அது பெரிய பூனையாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை. நேற்றிரவு ஒரு குழுவை சம்பந்தப்பட்ட பகுதிக்கு அங்கு அனுப்பியிருந்தோம். பின்னர் மேலும் ஒரு குழு அங்கு குவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளோம் என்றனர்.
இதனிடையே பரப்பன அக்ரஹாரா போலீசாரும் சிறுத்தை இருப்பதை உறுதி செய்தனர். பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை காணப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டும் புறநகரில் சிறுத்தை நடமாட்டம் குறித்த காட்சிகள் பலமுறை பதிவாகி இருந்தன.






