என் மலர்
இந்தியா
கோவில் நிகழ்வு: சட்டென சரிந்த மேடை.. 6 பேர் உயிரிழப்பு
- வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தின் பாக்பத் மாவட்டத்தில் மத நிகழ்ச்சி ஒன்றுக்காக போடப்பட்ட மேடை சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மூங்கில் மூலம் போடப்பட்டு இருந்த மேடை பாரம் தாங்க முடியாமல் திடீரென சரிந்து கீழே விழுந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
சம்பவம் நடைபெற்ற கோவிலில் "லட்டு மஹோத்சவம்" என்ற நிகழ்வுக்கு ஜெயின் சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதையடுத்து, திரளானோர் கோவிலுக்கு வருகை தந்து லட்டு வழங்கி வந்தனர். பக்தர்கள் வசதிக்காக கோவில் அருகே மூங்கிலில் மேடை போன்று அமைக்கப்பட்டு இருந்தது. இதில் பக்தர்கள் ஏறி சென்ற நிலையில், அதிக பாராம் தாங்க முடியாமல் மேடை சரிந்தது.
மேடை சரிந்ததை அடுத்து, காயமுற்றவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். சிறு காயங்களுடன் தப்பியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பலத்த காயமுற்றவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ராகேஷ் ஜெயின் என்பவர் கூறும் போது, இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இதற்காக மேடை அமைக்கப்படுவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், பூசாரிகள் லட்டு வழங்க சென்ற போது, மேடை சரிந்து கீழே விழுந்தது. அப்போது நூற்றுக்கும் அதிகமானோர் மேடையில் இருந்தனர், என்று தெரிவித்தார்.
கோவில் நிகழ்வில் மேடை சரிந்த சம்பவம் வருத்தம் அளிப்பதாக உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். மேலும், மீட்பு பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டுள்ளார். காயமுற்றோர் விரைந்து குணமடைய முதலமைச்சர் பிரார்த்தனை செய்து கொள்வதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.








