என் மலர்
இந்தியா

மும்பையில் ஒரே நாளில் 300 மி.மீ. மழை.. வெள்ளக்காடான சாலைகள் - அடுத்த 48 மணி நேரத்திற்கு எச்சரிக்கை
- ரெயில் தண்டவாளங்களில் 17 அங்குலம் வரை தண்ணீர் தேங்கியதால், புறநகர் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
- மும்பை மோனோ ரெயில் ஒன்று நடுவழியில் அந்தரத்தில் சிக்கிய நிலையில் அதில் இருந்த சுமார் 500 பயணிகள் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டனர்.
மகாரஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 300 மி.மீ. மழை பெய்துள்ளது. நகரில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
இந்நிலையில் அடுத்த 48 மணிநேரம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழையால் மிதி (Mithi) நதி அபாயக்கட்டத்தை தாண்டியதால், அப்பகுதியில் இருந்த 400 முதல் 500 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மும்பை விமான நிலையத்தில் 304 புறப்படும் விமானங்களும், 198 உள்வரும் விமானங்களும் தாமதமாகின. 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ரெயில் தண்டவாளங்களில் 17 அங்குலம் வரை தண்ணீர் தேங்கியதால், புறநகர் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
தாழ்வான பகுதிகளான தாதர், மாதுங்கா, பரேல், சியோன் போன்ற இடங்களில் வெள்ள நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கி வருகிறது.
இதற்கிடையே மும்பை மோனோ ரெயில் ஒன்று நடுவழியில் அந்தரத்தில் சிக்கிய நிலையில் அதில் இருந்த சுமார் 500 பயணிகள் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டனர்.






