என் மலர்tooltip icon

    இந்தியா

    2025 REWIND: நாட்டையே அதிரவைத்த டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு
    X

    2025 REWIND: நாட்டையே அதிரவைத்த டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு

    • டெல்லி கார் குண்டு சம்பவத்தில் தாக்குதல் நடத்திய நபர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.
    • சக்திவாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    2025-ஆம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம், இந்தியாவின் அண்மைக்கால வரலாற்றில் ஒரு மிக முக்கியமான மற்றும் அதிர்ச்சியளிக்கும் பயங்கரவாதத் தாக்குதலாகும்.

    கடந்த நவம்பர் 10ம் தேதி அன்று மாலை சரியாக 6.52 மணிக்கு பழைய டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் வாசல் எண் 1க்கு அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரைப் பயன்படுத்தி நடந்த தற்கொலைத் தாக்குதல் நாட்டையே அதிரச் செய்தது.

    இந்த கோரச் சம்பவத்தில் தாக்குதல் நடத்திய நபர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    சம்பந்தப்பட்ட கார், அரியானா மாநிலப் பதிவு எண் கொண்ட வெள்ளை நிற ஹூண்டாய் i20 ஆகும். இதில் அம்மோனியம் நைட்ரேட் உள்ளிட்ட சக்திவாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    குண்டுவெடிப்பின் தாக்கத்தால் அருகில் இருந்த 6 கார்கள், 2 ஈ-ரிக்ஷாக்கள் மற்றும் ஒரு ஆட்டோ ரிக்ஷா என சுமார் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பற்றி எரிந்து நாசமாயின.

    இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை மற்றும் டெல்லி போலீசார் நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்தன.

    அதன்படி, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் உமர் உன்-நபி (Dr. Umar-un-Nabi). இவர் அரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா (Al-Falah) பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று பிற்பகல் 3:19 மணிக்கே செங்கோட்டைப் பகுதிக்கு வந்த உமர், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக வாகன நிறுத்துமிடத்தில் காத்திருந்துள்ளார். திங்கட்கிழமை என்பதால் செங்கோட்டை மூடப்பட்டிருந்தது அவருக்குத் தெரியவில்லை என சந்தேகிக்கப்படுகிறது.

    இது ஒரு "White-collar terror" (கல்வி கற்றவர்களால் நடத்தப்படும் பயங்கரவாதம்) என பாதுகாப்பு அமைப்புகள் வகைப்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் உமருடன் தொடர்புடைய மேலும் சில மருத்துவர்கள் மற்றும் படித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஃபரிதாபாத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கும்பலுக்கும் இந்த குண்டுவெடிப்புக்கும் நேரடி தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    மத்திய அரசு இச்சம்பவத்தை அதிகாரப்பூர்வமாக ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என அறிவித்தது. உமர் உன்-நபிக்கு உதவியதாக இன்று கைது செய்யப்பட்ட நபருடன் சேர்த்து இதுவரை 9 பேர் கைதாகியுள்ளனர்.

    இச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×