search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    அனைத்து தரப்பினருக்குமான கட்சியாக பா.ஜனதா உள்ளது: 42-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

    பா.ஜனதா கட்சி மத்தியிலும், மாநிலங்களிலும் எந்தவிதத்திலும் வேறுபாடுகள் பார்ப்பதில்லை. அனைவருக்கும் பொதுவான சமூக நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
    புதுடெல்லி:

    பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 6-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு இன்று இந்த விழா நாடு முழுவதும் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி பிரதமர் மோடி நேற்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் 14 நாட்கள் கொண்டாட்டத்துக்கு உத்தரவிட்டார். பா.ஜ.க. நிறுவன தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 7-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மக்கள் சேவையில் ஈடுபட பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.

    இதன்படி ஏப்ரல் 7-ந் தேதி ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம், மத்திய அரசின் குறைந்த விலை மருந்தகங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஏப்ரல் 8-ந்தேதி பிரதமரின் ஆவாஸ் யோஜ்னா வீடு கட்டும் திட்டம், ஏப்ரல் 9-ந்தேதி வீடுகளுக்கான குடிநீர் திட்டம் குறித்து மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.

    ஏப்ரல் 11-ந்தேதி ஜோதிபா பூலேவின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும். 12-ந்தேதி எம்.பி.க்கள் சுற்று வட்டார பள்ளிகளுக்கு சென்று மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வருகிற 13-ந்தேதி ரே‌ஷன் கடைகளுக்கு சென்று இலவச உணவு தானிய திட்டம் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும்.

    ஏப்ரல் 14-ந்தேதி அம்பேத்கர் பிறந்தநாளை மக்களோடு இணைந்து கொண்டாட வேண்டும். இதே போல் ஏப்ரல் 15-ந் தேதி பழங்குடியினர் தினத்தை கொண்டாட வேண்டும். அந்த சமுதாய மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.

    ஏப்ரல் 16-ந்தேதி அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்தும், வருகிற 17-ந்தேதி மத்திய அரசின் பொருளாதார திட்டங்கள் குறித்தும், வருகிற 18-ந்தேதி விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டம், பயிர் காப்பீடு திட்டம் குறித்தும், வருகிற 19-ந்தேதி அங்கன்வாடிகளுக்கு சென்று ஊட்டச்சத்து திட்டம் குறித்தும், 20-ந்தேதி சுதந்திர போராட்ட தலைவர்களின் பெருமைகளையும் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.

    சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குளங்களை தூர்வாரி புனரமைக்க வேண்டும் என்றும் எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு காணொலி வாயிலாக நாடு முழுவதும் பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    4 மாநிலங்களில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் நிறுவன தினம் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமல்ல கடந்த 30 ஆண்டுகளில் பாராளுமன்ற மேல்-சபையில் 100 எம்.பி.க்களை வைத்துள்ள முதல் கட்சி என்ற பெருமையையும்
    பா.ஜனதா
    கட்சி பெற்றுள்ளது.

    முந்தைய அரசுகள் ஒருசில குறிப்பிட்ட பிரிவினருக்காகவே ஆட்சி செய்து வந்தன. முந்தைய ஆட்சியாளர்கள் மத்தியில் ஊழலும், வெறுப்புணர்வும் வாக்கு வங்கியின் பக்க விளைவுகளாக இருந்தன. ஆட்சிக்கு வருவதற்காக முந்தைய ஆட்சியாளர்கள் எவ்வளவோ தவறு செய்தார்கள்.

    அவை அனைத்தையும் பா.ஜனதா சவாலாக எதிர்கொண்டது. நாட்டில் 2 வகையான அரசியல் நிலை காணப்படுகிறது. ஒன்று பரிவார் பக்தி, மற்றொன்று ராஷ்ட்ர பக்தி. பா.ஜனதா கட்சியை பொறுத்தவரை ராஷ்ட்ர பக்தியில் தன்னை ஆழ்த்திக் கொண்டுள்ளது.

    ஆனால் மற்ற கட்சிகள் பரிவார் பக்தியில் முழ்கியுள்ளன. இந்த சவாலில்
    பா.ஜனதா
    வெற்றி பெற்று இருக்கிறது என்பதை ஒவ்வொரு பா.ஜ.க. தொண்டனும் பெருமையோடு எண்ணிப் பார்க்க வேண்டும்.

    குடும்ப அரசியலின் ஆபத்தை உணர்ந்து மக்கள் அளித்துள்ள தீர்ப்பால் இந்த சவாலில் பா.ஜனதா வெற்றி பெற்று இருக்கிறது. குடும்ப அரசியல் உள்ள கட்சிகள் அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறி ஊழலில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களிலும் அவர்கள் தீவிர அரசியலில் உள்ளனர்.

    குடும்ப அரசியலால் இளைஞர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். திறமையான இளைஞர்களுக்கு குடும்ப அரசியலில் இருப்பவர்கள் வாய்ப்பு கொடுப்பதில்லை. அவர்களை அரசியலில் மேலே கொண்டு வருவதில்லை. இளைஞர்களுக்கு துரோகம் நடந்தது.

    ஆனால் பா.ஜனதா கட்சி மத்தியிலும், மாநிலங்களிலும் எந்தவிதத்திலும் வேறுபாடுகள் பார்ப்பதில்லை. அனைவருக்கும் பொதுவான சமூக நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதனால் சமூகத்தில் அனைவரும் பயன்பெறுகிறார்கள்.

    அனைத்து தரப்பினருக்குமான கட்சியாக பா.ஜனதா கட்சி திகழ்கிறது.

    இவ்வாறு பிரதமர் பேசினார்.



    Next Story
    ×